சிவகங்கை: தமிழக ஆட்சியாளர்களிடமும், அரசியலிலும், உணர்ச்சியும் கவர்ச்சியும்தான் இருக்கு… வளர்ச்சி இல்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். அவருடைய நேரடி விமர்சனம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீட் உள்பட பல்வேறு விஷயங்களில், மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ப.சிதம்பரத்தின் மகன் சிவகங்கை எம்.பி.யான கார்த்தி சிதம்பரத்தின் கண்ணோட்டம், அரசியலுக்கு அப்பால், நாட்டின் வளர்ச்சியை நோக்கியே காணப்படுகிறது. அவரது ஓப்பன் டாக், காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி கூட்டணி கட்சியான திமுகவுக்கும் அவ்வப்போது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில்,சிவகங்கை தொகுதியில் எம்பி நிதியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்றைத் தினம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியளர்களின் இந்தி திணிப்பு, எய்ம்ஸ், காங்கிரஸ் தலைவர் தேர்தல், தமிழக அரசியல் களம் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு அவர் கூறிய கருத்துக்கள் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசுப் பணி தேர்வில் இந்தி திணிப்பைக் கொண்டு வருவதைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றவர், மத்தியஅரசு, தமிழகத்தை மாற்றான் தாய் மனதுடன் அணுகுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். பிரதமர் மோடி மதுரைக்கு வந்தால் 95% முடிந்துவிட்டதாக பாஜகவினர் கூறும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை நடைப்பயணம் செல்லும் நிலையில், அதற்குப் பொதுமக்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து உள்ளதாகத் தெரிவித்த கார்த்தி சிதம்பரம், இந்த நடைப்பயணம் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு வகைகளிலும் பலன் அளிக்கும் என்றவர், தலைவர் தேர்தலில் யார் ஜெயிச்சாலும், அவர்கள் நேரு குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவே வேண்டிய நிலைதான் உள்ளது, தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றார்.
தமிழக அரசியல் களம் குறித்த கேள்விக்கு, “தமிழ்நாட்டில் இப்போது நடைபெறும் விவாதங்கள் எதுவும் ஆக்கப்பூர்வமானதாகவே இல்லை. மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார். அதை எப்படிக் குறைக்கலாம் என்பது குறித்து எல்லாம் இங்கு விவாதம் நடைபெறுவது இல்லை. கல்வியில் என்ன மாதிரியான சீர்திருத்தங்களை ஏற்படுத்தலாம் என்ற விவாதம் இல்லை தேவையற்ற விவாதங்களே நடைபெற்று வருகிறது, தேவையில்லா கருத்துக்களும், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மன்னர்கள் எந்த மதம் என்று விவாதித்து வருகின்றனர். இதனால் யாருக்கு என்ன பலன், இதெல்லாம் தேவையில்லாதது.
தமிழக அரசும் சரி, தமிழக அரசியலும் சரி, உணர்ச்சி, கவர்ச்சியை நோக்கியே செல்கிறது. இங்குள்ள அரசியல் வளர்ச்சிப்பாதையில் செல்வதாக எனக்குத் தெரியவில்லை என்று காட்டமாக தெரிவித்ததுடன்,
முதல்வரின் தூக்கமின்மை கேள்விக்கு, அது, அவர்களது உட்கட்சி விவகாரம், அது தொடர்பாக எதையும் சொல்ல விரும்பவில்லை என்று நழுவியவர், அவர்களிடம் மேடையில், எப்படி பேச வேண்டும் என்று நான் சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.