சென்னை: மதுரையில் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுற்றிக்காட்டியும், தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகள் விஷயத்தில் தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வெளியிட்டுள்ள பதிவில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் 5 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப் பட்டுள்ளான். தமிழ்நாட்டில் கொலைகாரர்கள், போதைப்பொருள், பாலியல் கடத்தல்காரர்கள், வன்கொடுமை செய்பவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
மாநில காவல்துறை கடந்த கால நிகழ்வுகளில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. புதிய தவெக அரசு தனது வெற்றிக் கொண்டாட்ட பாணியில் இருந்து வெளிவந்து, களத்தில் அரங்கேறி வரும் இந்த மோசமான உண்மைகளை எதிர்கொள்ள இன்னும் தொடங்கவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் சிறுவன் கொலை
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிப்படுகொலை – சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு – ஒரு மாதம் காத்திருந்து சிறுவனை கொலை செய்த கும்பல் – விளக்குத்தூண் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் செயல்பட்டுவருகிறது. இங்கு நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து விட்டு தப்பியோடினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்குத்தூண் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கடந்த மாதம் சித்திரைத் திருவிழாவின் போது கொலையுண்ட சிறுவன் குபேந்திரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது இருவரும் ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கியபோது முத்து மணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி தனது காயம் ஆறுவதற்குள் சிறுவன் குபேந்திரனை கொலை செய்துவிட வேண்டுமென திட்டம் தீட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு சிறுவன் குபேந்திரன் மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகே நின்றபோது அங்கு 2 பைக்குகளில் வந்த முத்துமணி மற்றும் அவனது தம்பி ராஜ் மற்றும் சதீஷ்குமார் ,ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் குபேந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது குபேந்திரன் ஓட முயற்சித்தபோதும் விரட்டி வெட்டிபடுகொலை செய்தனர். இதனால் சம்பவ இடத்திலயே குபேந்திரன் உயிரிழந்த பின்னர் கொலை செய்த கும்பலானது அங்கிருந்து தப்பியோடியதும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த விளக்குத்தூண் காவல்துறையினர் கொலை செய்துவிட்டு தப்பியோடி கும்பலை தேடிவருகின்றனர். வடக்கு ஆவணி மூல வீதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கார் பார்க்கிங்கில் ஒப்பந்ததாரர்கள் மூலமாக எடுக்கப்பட்ட கடைகளில் சமூகவிரோத கும்பல்களை இரவில் தங்க வைப்பதாகவும் தொடர்ந்து அந்த பகுதியில் மது அருந்துவது போதை பொருட்கள் பயன்படுத்துவது என பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் நாள்தோறும் இரவு நேரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே காவல்துறையினர் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ள மீனாட்சி அம்மன் கோயில் அருகே இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே கார் பார்க்கிங்கில் இளைஞர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.