‘உரிமை மீட்க…தலைமுறை காக்க…’ என்ற கோஷத்தோடு அன்புமணி மேற்கொண்டு வரும் நடைப் பயணத்திற்கு அனுமதி வழங்க கூடாது என அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக காவல்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த நடைப்பயணத்திற்கு அனுமதி மறுத்ததோடு இதனால் வடமாநிலங்களில் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறிய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 25, நேற்று மருத்துவர் ராமதாஸின் பிறந்தநாளை அடுத்து திருப்போரூர் கந்தசாமி கோயிலில் வழிபட்டு அன்புமணி தனது 100 நாள் நடைப்பயணத்தை துவங்கிய நிலையில் தமிழக காவல்துறை விதித்திருக்கும் இந்த தடை ராமதாசுக்கு தமிழக அரசு கொடுத்த பிறந்தநாள் பரிசாகப் பார்க்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கி,  திருவள்ளூர் மாவட்டம், சோளிங்கர் , ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்கள் மற்றும் ஆம்பூர், ஆற்காடு ஆகிய இடங்களில்  மேற்கொள்ளப்பட இருந்த இந்த நடைபயணம் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் மாபெரும் ரோடு ஷோவுடன் முடிவடையும். வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது.

பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் மூலம் எந்த ஒரு உடன்பாடும் இதுவரை எட்டப்படவில்லை.

இந்த நிலையில், இந்த பேரணியால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகக்கூடும் என்பதால் அன்புமணியின் உரிமை மீட்புப் பயணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும் என்று காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.