சென்னை:

 நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள  அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ள தாகவும், சுமார் 1 லட்சம் மாணவர்கள்  தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு வந்திருப்பதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பொதுவாக அரசு பள்ளிகள் என்றாலே, படிப்பு, இடவசதி சரியிருக்காது என்று மக்களிடையே கருத்து  பரவிய காலம் உண்டு. ஆனால், தற்போது அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட அதிக வசதிகளுடன் நவீன தொழில்நுட்பத்துடன் திகழ்ந்து வருகிறது. மேலும் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் அபரிதமான கல்விக்கட்டணம் பொதுமக்களிடையே கடுமையாக அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளை பெரும்பாலான பெற்றோர்கள் நாடி வருகின்றனர்.

நடப்பு கல்வியாண்டில் (2019-20)  2 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு இடம் மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த கல்வி ஆண்டில் (2018-19)  3.93 லட்சம் பேர் ஒன்றாம் வகுப்பு படித்த நிலையில், நடப்பு ஆண்டில், இரண்டாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 4.16 லட்சமாக உயர்ந்துள்ளது.

தனியார் பள்ளிகளிலிருந்து 23,032 பேர் இரண்டாம் வகுப்பில் இணைந்துள்ளனர். மூன்றாம் வகுப்பில் 30,744 மாணவர்களும், நான்காம் வகுப்பில் 27,868 மாணவர்களும், ஐந்தாம் வகுப்பில் 23,859 மாணவர்களும் புதிதாக இணைந்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் ஒரு லட்சம் வரையில் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாணவர்கள் சேர்க்கை கடந்த  ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2ம் வகுப்பு  முதல் 5 வரையிலான வகுப்புகளில் புதிதாக இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக  கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.