சென்னை: ஒட்டுமொத்த செயல்திறனிற்கான சிறந்து விளங்கும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு இந்தியா டுடே நிறுவனத் தால் விருது வழங்கப்படவுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், முன்பை விட கூடுதலாக நான் உழைத்தாக வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.
ஆங்கில இதழான `இந்தியா டுடே’ மாநிலங்களின் செயல்திறன் குறித்து நடத்திய ஆய்வில், தமிழகம் சிறந்து விளங்குவதாக தெரிவித்து உள்ளது. இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியா டுடே இதழ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், நாடு முழுவதும் உள்ள பெரிய மாநிலங்களில் செயலாற்றலில் பொருளாதாரம், அடிப்படைக் கட்டமைப்பு, விவசாயம், சுகாதாரம், கல்வி, சட்டம் – ஒழுங்கு, ஆட்சி நிர்வாகம், ஒட்டுமொத்த வளர்ச்சி, சுற்றுலா, சுற்றுச்சூழல், தூய்மை, தொழில் முனை வோரை ஊக்குவித்தல் போன்ற துறைகளின் வளர்ச்சி, ஊக்குவிப்பு, கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்து பட்டியல் வெளியிட்டு உள்ளது.
அதில், அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலமாக தெலங்கானாவும், ஒருங்கிணைத்த வளர்ச்சியில் ஆந்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதிக தொழில் முனைவோர் உருவாகும் மாநிலமாக அரியானாவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேளாண் வளர்ச்சியில் பஞ்சாப் மாநிலமும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. முக்கியமாக சுகாதாரத்தில், கொரோனா தொற்று அதிகமுள்ள கேரளா முதலிடத்தில் உள்ளதுடடன், கல்வியறிவில் இமாச்சல் பிரதேசம் முதலிடத்திற்கு வந்துள்ளது.
தமிழகம் முதல் மாநிலமாக வந்துள்ளது குறித்து, இந்தியா டுடே நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், கூறியிருப்பதாவது,
“இந்தியாவின் தலைசிறந்த ஆங்கில இதழ்களில் ஒன்றான ‘இந்தியா டுடே’ இதழின் இயக்குநர் ராஜ்செங்கப்பாஅவர்களே! அதன் ஆசிரியர் அமர்நாத் கே.மேனன் அவர்களே! இந்தியா டுடே ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்களே! இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் நிருபர்களே! பத்திரிக்கையாளர்களே! இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவின் சமூக, அரசியல், பொருளாதார, கலை மற்றும் பண்பாட்டுத் தட்பவெப்பங்களைச் சொல்கின்ற தலைசிறந்த இதழான ‘இந்தியா டுடே’யின் சார்பில் வழங்கப்படும் விருதினைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘இந்தியா டுடே’ இதழுக்கும் அதன் ஆசிரியர் குழுவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜ் செங்கப்பா அவர்கள் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் செயல்பாட்டைக் கணித்ததாகவும் – அதில், ஒட்டுமொத்த செயல்திறனிலும் சிறந்து விளங்கும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்திருந்தார்.
இதைப் படித்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது தனிப்பட்ட எனக்குக் கிடைத்த பெருமைஅல்ல; ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த பெருமை ஆகும். தமிழ்நாட்டுக்குக் கிடைத்த சிறப்பு ஆகும்! ‘இந்தியா டுடே’ வழங்கிய இந்த விருதை, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமாக்க விரும்புகிறேன். நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாபெரும் நெருக்கடி காலமாக அது இருந்தது. நிதி நெருக்கடியும், மருத்துவ நெருக்கடியும் சேர்ந்து வதைத்தது. 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் நிர்வாகமாகவும் இருந்தது.
அத்தகைய சூழலில் அரசின் துரிதமான நடவடிக்கையாலும் – மக்களின் தியாக உணர்வாலும் கொரோனாவை வென்றோம். ஊரடங்கு மூலமாக வாழ்வாதாரம் இழந்த மத்தியதர வர்க்கத்தினருக்கும் உதவிகள் செய்துகொண்டே கொரோனாவுக்கும் முற்றுப்புள்ளி வைத்தோம். அப்போது, இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் என்னைப் பாராட்டி எழுதினார்கள். இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் – நம்பர் 1 முதல மைச்சர் என்றும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டார்கள். அதுதொடர்பாக என்னை ஊடகத்தினர் கேட்டபோது, ‘நான் நம்பர் 1 என்று சொல்வதை விட, தமிழ்நாடு நம்பர் 1ஆக வேண்டும், அதுதான் என்னுடைய விருப்பம்’ என்று நான் சொன்னேன்.
அந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியா டுடே இதழானது, தமிழ்நாடு நம்பர் ஒன் என்று அறிவித்துள்ளது மிகமிக மகிழ்ச்சிக்குரியதாக அமைந்து உள்ளது. நம்பர் 1 என்று சொன்னபிறகுதான் எனக்கு பயமே வருகிறது. இதனைத் தக்கவைப்பதற்காக முன்பை விடக் கூடுதலாக நான் உழைத் தாக வேண்டும் என்று நான் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.
பத்து ஆண்டுகளாக மிகமிக மோசமான நிலையில் – அனைத்துத்துறைகளிலும் பாழ்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டை மீட்டெடுப்பது என்பது சாதாரண மானது அல்ல. நாளைக்கே நடந்து விடும் என்று நம்பும் கற்பனாவாதியும் அல்ல நான். சரியான இலக்கை வைத்து – தொடர்ச்சியாக உழைத்தால், தமிழ்நாடு இழந்த பெருமையை மீண்டும் அடையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதனை நோக்கித்தான் உழைத்துக்கொண்டு இருக்கிறோம்; ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.