சென்னை: தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. 11% பேர் 2 தவணை தடுப்பூசி எடுத்து, நாட்டிலேயே முதலிடத்தில் சென்னை திகழ்கிறது. இதை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் 45 இடங்களில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந் நிலையில் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் என ஐந்து பெருநகரங்களில் எந்த நகரில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சென்னையில் இரண்டு தவணை தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னையில் 11 சதவீதம் நபர்கள் இரண்டாம் தவணை எடுத்துக்கொண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பெங்களூருவில் 10 சதவீதமும் டெல்லி மும்பை ஆகிய நகரங்களில் தலா 7 சதவீதமும் ஹைதராபாத்தில் 5 சதவீதமும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக பெங்களூரில் 64 சதவீதமும், சென்னையில் 43 சதவீதமும் அதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் 37 சதவீதமும் 33 சதவீதம் மும்பையில் 32 சதவீதமும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரில் மொத்த மக்கள் தொகையில் 45 வயது மேற்பட்டோரில் 91 சதவீத நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 85 சதவீதமும் மும்பையில் 70 சதவீதமும் டெல்லியில் 59 சதவீதமும் ஹைதராபாத்தில் 48 சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
2 தவணை தடுப்பூசிகளையும் அதிகமாக செலுத்தி கொண்டவர்களில் நாட்டிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளது.