சென்னை:
வீடுகள் கட்டுவதற்கான விதிகள் எளிமையாக்கப்பட்டு ‘தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்-2019’ புத்தகத்தை முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழகத்தில் மனைப்பிரிவு மற்றும் கட்டிடத்துக்கு தேவையான அனுமதி பெறுவதற்கான விதிகள் தனித்தனியாக உள்ளன. தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம் 1971, சென்னை மாநகராட்சி சட்டம் 1919, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 மற்றும் பிற மாநகராட்சிகளுக்கான சட்டங்களில் தனித்தனியாக உள்ள இந்த விதிகள் ஒருங் கிணைக்கப்பட்டு, ஒரே தொகுப்பாக மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு ஒருங் கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்-2019 உரு வாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டிட விதிகள் புத்தகத்தை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட் டார். அதை துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நகரமைப்பு செயல் திட்டம் 2016, மத்திய அரசின் மாதிரி கட்டிட விதிகள், தேசிய கட்டிட வழிமுறைகள், தேசிய நகர்ப்புற போக்குவரத்து சார்ந்த வளர்ச்சிக் கொள்கை, பிற மாநிலங்களில் உள்ள விதிகள் ஆகியவற்றின் சிறப்பு அம்சங்களை கருத்தில்கொண்டு ‘தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் – 2019’ உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளையும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
இப்புதிய விதிகளின்படி, வீடு கட்டுவதற்காக அனுமதிக் கப்படும் தளப்பரப்பளவு உயர்த் தப்பட்டுள்ளது. மேலும், பக்க இடைவெளிகள் குறைக்கப்பட்டு, கட்டிடத்தின் உயரமும் தளங் களின் எண்ணிக்கையும் அதிகரிக் கப்பட்டுள்ளன.
இதன்மூலம் ஏழை எளிய மக்களுக்கும் குறைந்த விலையில் வீடுகள் கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும். அதேநேரத்தில், கட்டிடபாதுகாப்பை உறுதி செய்ய வும், விதிமீறல்களை ஆரம்பகட்டத் திலேயே கண்டறிந்து தவிர்க்கும் வகையிலும் இந்த பொது விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், விண்ணப்பிக்கும் முறைகள், விண்ணப்பங்களை பரிசீலிக்கும் முறைகள் எளிமை யாக்கப்பட்டு, விரைவில் கட்டிட அனுமதி அளிக்கும் வகையில் புதிய விதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் – செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் கா.பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண் டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.