டெல்லி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க  மத்தியஅரசை வலியுறுத்தி  திமுக எம்பிக்கள்  நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம்,  திமுக எம்பி கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி.க்கள் மட்டுமின்றி,  திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த  எம்பிக்களும் பங்கேற்றனர்.

வங்கக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்படுவதாக  வாடிக்கையாக தொடர்கிறது.  இந்த விஷயத்தில் இந்தியா, இலங்கை இடையே பல முறை பேச்சுவார்த்தை நடைபெறும் முற்றுபெறாத நிலையே தொடர்கிறது.

இந்த நிலையில், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பிக்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தின்போது,  தமிழக எம்பிக்கள் தீர்வு வேண்டும், தீர்வு வேண்டும், மீனவர்களின் கைதுக்கு நிரந்தர தீர்வு வேண்டும், தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்! என கோஷமிட்டனர்.

முன்னதாக, மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி திமுக நாடாளுமன்றகுழுத் தலைவர் கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,  இலங்கை அரசு தமிழக மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதும், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்காமல் இருப்பதும், கடலோரப் பகுதியில் வாழும் மீனவ சமுதாயத்தினருக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவதை நிறுத்தவும், இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்படகுகளையும் விடுவிக்க வழி செய்யும் வகையில், மத்திய அரசு உடனடியாக உயர்மட்ட தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,”என கூறினார்.

ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகபட்டினம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்படுகின்றனர். மேலும் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குல் நடத்துவதும், துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவங்களும் அவ்வப்போது நேரிடுகின்றன. இதனால் மீனவர்கள் மத்தியிலும், அவர்கள் குடும்பத்தினர் மத்தியிலும் கடும் அச்ச உணர்வு எழுந்துள்ளது. மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பதுடன், தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், படகுகள் கைப்பற்றப்படுவதையும் தடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த (2024)  ஆண்டு மட்டும் இலங்கை கடற்படையால் 530 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை சிறைகளில் தற்போது 97 மீனவர்கள் உள்ளனர்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 216 படகுகள் இலங்கை வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.