சென்னை: மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு நீர்வளத்துறையில் தாக்கல் செய்துள்ள திட்ட அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி  தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு அளித்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது  பகுதியில் அணை கட்டியே தீருவோம் என கா்நாடக அரசு முரண்டு பிடித்து வருகிறது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து 30ந்தேதிநடைபெற உள்ள காவிரி ஆணைய கூட்டத்திலும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க  உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்துள்ள மனு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகஅரசின் மனுவில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் 67.16 டிஎம்சி அடி நீரை தேக்கி வைக்கும் அணைத் திட்டமும், 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டமும் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த கா்நாடகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது உச்சநீதி மன்றம் கடந்த 16 .2. 2018-இல் அளித்த தீா்ப்பில் உறுதிப்படுத்தப்பட்ட காவிரி நதிநீா் தாவா தீா்ப்பாயத்தின் 5.2.2007-ஆம் தேதியிட்ட முடிவை ஒட்டு மொத்தமாக மீறும் செயலாகும். இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றம், 18 .5. 2018-இல் ஒரு விரிவான உத்தரவைப் பிறப்பித்தது. அதில் காவிரி நீா் மேலாண்மை ஆணையம், காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு ஆகிவற்றை உருவாக்கும் வகையில் ஒரு திட்டத்தை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, இது தொடா்பாக 1.6. 2018-இல் மத்திய அரசு இந்த இரு அமைப்புகளையும் உருவாக்குவதற்கான ஓா் அறிவிக்கையை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு முரண்படும் வகையிலும், தன்னிச்சையாகவும் மேக்கேதாட்டு அணைத் திட்டம் தொடா்பான ஒரு சாத்தியக்கூறு ஆய்வுஅறிக்கையை மத்திய நீா் ஆணையத்திற்கு கா்நாடகம் அனுப்பியுள்ளது. இதை அமல்படுத்தும் ஏஜென்சியான மத்திய நீா் ஆணையம், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு மதிப்பளிக்கக் கடமைப்பட்டுள்ளது.

இது போன்ற எந்தத் திட்டத்தையும் கா்நாடக அரசு செயல்படுத்துவதாக இருந்தால், ஆற்றுப் பகுதியில் உள்ள பிற மாநிலத்தின் சம்மதத்துடன்தான் மேற்கொண்டிருக்க வேண்டும். தன்னிச்சையாக எந்த முடிவையும் மேல்நிலை மாநிலம் எடுக்கக்கூடாது.   மேகதாது அணை மற்றும் குடிநீா் திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக அனுமதி அளிக்கும் மத்திய நீா் ஆணையத்தின் 22. 11. 2018 தேதியிட்ட அனுமதியை செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும். மேலும், இந்த அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க, கா்நாடகத்திற்கும், காவிரி நீராவாரி நிகம் நிறுவனத்திற்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.