சென்னை:
தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் விசாரணையில் 58ஆயிரத்து 437 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்குவதை தடுக்க மாதந்தோறும் லோக்அதோலத் விசாரணை நடைபெறுவது வழக்கம். அதன்படி, தமிழகம் முழுவதும் சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் நேற்று தமிழகத்தில் லோக் அதாலத் நடத்தப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளையில் தலா இரண்டு அமர்வுகளும், அனைத்து மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களில் 244 அமர்வுள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.விமலா, நீதிபதி கோகுல்தாஸ், மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.மகாதேவன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். நேற்று நடைபெற்ற விசாரணையில், சமரசத்துக்கு ஏதுவான குற்ற வழக்குகள், சிவில், விவாகரத்து மற்றும் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் எடுத்து விசாரிக்கப்பட்டன.
நேற்றைய ஒரு நாள் விசாரணையில் மட்டும் 58 ஆயிரத்து 437 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு 83 கோடி ரூபாய் உரியவரிடம் வழங்கப்பட்டது.
அவற்றில் 2 ஆயிரத்து 865 வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள். 55 ஆயிரத்து 572 வழக்குகள், கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகும்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.