சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் உரை குறித்து எடப்பாடி பழனிச்சாமி, பாஜக வானதி மற்றும் பாமக எம்எல்ஏக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை ஆர்.என்.ரவி புறக்கணித்த நிலையில், சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை வாசித்தார். இதைத்தொடர்ந்து, அவை ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் கூடி முடிவு செய்தது. அதன்படி,   தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி வரை நடக்கும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

பேரவையின் நாளை கூட்டத்தொடரில்,  மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவித்து நாளை தீர்மானம் நிறைவேறிய பிறகு அவை ஒத்திவைக்கப்படும். வரும் 22, 23 மற்றும் 24ம் தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடக்க  இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஆளுநர் உரை குறித்து முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து,  அவையில் இருந்து அதிமுக, பாஜக, பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

2026-ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநரைச் சிவப்புக் கம்பள வரவேற்புடன் அழைத்து வந்து கூட்டத்தொடர் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டதாகச் சபாநாயகர் தெரிவித்தார். இக்கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வுகளாகப் பின்வருவனவற்றைச் சபாநாயகர் குறிப்பிட்டார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களின் மறைவிற்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரையின் மீது விவாதங்கள் நடைபெறும். ஜனவரி 24 அன்று முதலமைச்சரின் பதிலுரையுடன் கூட்டத்தொடர் நிறைவு பெறும்.

ஆளுநர் உரை வாசிக்கப்படும்போது மைக் அணைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த சபாநாயகர், அவை மரபுப்படி சபாநாயகர் பேசும்போது மற்ற உறுப்பினர்களின் மைக் அணைக்கப்படுவது வழக்கம் என்றும், இதில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்றும் விளக்கினார். மேலும், ஆளுநர் தனது கடமையைச் செய்ய வேண்டும் என்றும், மாநில அரசு தயாரித்து ஒப்புதல் பெற்ற உரையை வாசிப்பதே அரசியலமைப்புச் சட்டம் அவருக்குக் கொடுத்துள்ள பணி என்றும் வலியுறுத்தினார்.

தமிழக அரசு சந்திக்கும் நிதி நெருக்கடிகள் குறித்தும் சபாநாயகர் பேசினார். சமக்ர சிக்ஷா அபியான், ஜல் ஜீவன் திட்டம், சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டம் மற்றும் பேரிடர் நிவாரண நிதி என மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையிலும், மகளிர் உரிமைத் தொகை, உயர்கல்விக்கான உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களை அரசு திறம்படச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

சட்டமன்றத்தின் மாண்பைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. “தமிழ்த் தாய் வாழ்த்து”டன் தொடங்கி “தேசிய கீத”த்துடன் நிறைவு செய்வது என்பது மாற்ற முடியாத ஒரு மரபு என்றும், யாருக்கும் பயந்து இந்த மரபுகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் சபாநாயகர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கே அவையில் கருத்துச் சொல்ல அதிகாரம் உள்ளது என்பதையும், ஆளுநர் தனது அரசியலமைப்புச் சட்டப் கடமைகளைத் தாண்டி அரசியல் பேசுவது முறையல்ல என்பதையும் சபாநாயகர் இப்பேட்டியின் மூலம் தெளிவுபடுத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமி 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவர் சாடியவர்,  குறிப்பாக போதைப்பொருள் புழக்கம், தற்கொலைகள் அதிகரிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் அறிக்கையை மேற்கோள் காட்டி பேசினார்.

உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், தொழில்துறை முதலீடுகளில் தமிழகம் பின் தங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் தவறான புள்ளிவிவரங்கள் இருந்ததால், உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் ஆளுநர் செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் முன்கூட்டியே திட்டமிட்டு ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாகவும், இது மரபை மீறிய செயல் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் உண்மை நிலையை மறைக்கப் பார்க்கும் இந்த திமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக அவர் விளக்கமளித்தார்.

வானதி சீனிவாசன்

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தாமல் வெளியேறியது தொடர்பாக, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து தனது கண்டனங்களைப் பதிவு செய்தார். ஆளுநர் உரையின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையைத் தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்று  குற்றம் சாட்டியவர்,  தேசிய கீதம் இசைப்பதில் அரசுக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் வெளியேறுவார் என்பதை முன்கூட்டியே யூகித்து, முதல்வர் ஸ்டாலின் அதற்கான பதிலுரையைத் தயார் செய்து வந்ததாக சுட்டிக்காட்டியவர், இதன் மூலம், மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் நிலவுவதை உறுதி செய்யவே இந்த அரசு விரும்புகிறது என்பது நிரூபணமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது எதிர்க்கட்சிகளின் ஆடியோ மற்றும் வீடியோக்களை முழுமையாகத் துண்டித்து, திமுக அரசு ஒருவித பாசிசப் போக்கைக் கடைப்பிடிப்பதாக விமர்சித்த வானதி,   ஜனநாயகத்தின் தூணான ஊடகங்களைப் பார்த்து இந்த அரசு பயப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

ஆளுநர் ஏன் உரையைப் படிக்காமல் வெளியேறினார் என்பதற்கான காரணங்கள் ராஜ்பவனில் இருந்து அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். மேலும், அரசின் உரையில் இருந்த முரண்பாடுகளை ஆளுநர் ஏற்கனவே கவனித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது நடந்த இந்த நிகழ்வுகள், தமிழக அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது என்று கூறி வானதி சீனிவாசன் தனது உரையை நிறைவு செய்தார்.

பாமக எம்எல்ஏக்கள்

தமிழக சட்டமன்றத்தின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி பாட்டாளி மக்கள் கட்சி (PMK) சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.  திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில், தினந்தோறும் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருவதாகவும், குறிப்பாகச் சிறு குழந்தைகள் கூடப் பாதுகாப்பு இல்லாத சூழலில் பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும்  குற்றம் சாட்டினர்.

தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். கஞ்சா விற்பனை மற்றும் சந்துக்கடை மது விற்பனை ஆகியவை தடையின்றி நடைபெற்று வருவதாகவும், இதனைத் தடுக்கத் தவறிய அரசை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தனர்.

சட்டமன்றத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை மாற்றி அமைக்கக் கோரி ஏற்கனவே மனு அளித்திருந்தும், இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பாகத் தங்கள் அதிருப்தியையும் அவர்கள் பதிவு செய்தனர்.

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, ஆளுநர் முறையாகத்தான் உரையாற்றினார் என்றும், ஆளுங்கட்சியினர் தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைத்த பிறகு அவர் அங்கிருந்து சென்றதாகவும் குறிப்பிட்டனர். ஆளுநரின் நடவடிக்கையில் தவறில்லை என்பது போன்ற கருத்தையே அவர்கள் வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராகத் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒரு எதிர்க்கட்சியாகத் தங்கள் கடமையைச் செய்துள்ளதாகப் பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்தச் சந்திப்பின் மூலம் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]