சென்னை: ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். இந்த கூட்டத்தொடர், ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், முதல் நாளில் ஆளுநர் உரையாற்றுவார். ஆளுநர் உரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கூட்டத்தொடர் நடக்கும் நாட்கள் குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுக்கும்.
இந்த கூட்டத்தொடரின் போது, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சபாநாயகர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்து இருக்கை ஒதுக்கப்படும் என்றவர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமாரை நியமனம் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்து கொடுத்த கடிதத்தின் மீது ஏற்கனவே விளக்க உரையை வழங்கியுள்ளேன். அதற்கு இரு தரப்பினரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனவே அதே நிலை நீடிக்கிறது” என்றார்.
இதன்படி, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம் நீடிக்கிறார் என்ற பொருளில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.