சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இன்றைய கூட்டத்தில் மறைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தொடர் நான்கு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பேரவை வளாகத்தில் பாமக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். பாமக சட்டமன்ற குழு தலைவரான பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளரான ஜிகே மணியை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி, அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் 3 பேர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இன்று பேரவை கூடியதும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புரட்சிமணி, குணசேகரன், கோவிந்தசாமி, அமர்நாத், அறிவழகன், ராமலிங்கம், கலுலுர் ரஹ்மான், சின்னசாமி மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து.கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைடுத்து அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. முன்னதாக, சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவுத் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (அக்.13) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையை எத்தனை நாட்கள் நடத்தலாம்? உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு , சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை (அக்.14, செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகின்ற அக்.17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.
இதில் அக்.14 – சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். மேலும் கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குறித்தும், முக்கிய பிரமுகர்கள் மறைவு குறித்தும், சட்டமன்ற பேரவை உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி, மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.
அக்.15 (புதன்கிழமை) – 2025 – 26ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் (முதல்) பேரவைக்கு அளிக்கப்படும். அரசினர் அலுவல்கள்
அக்.16 (வியாழக்கிழமை) – 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை (முதல்) மீது விவாதம் நடைபெறும்.
அக்.17 (வெள்ளிக்கிழமை) – 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் (முதல்) மீதான விவாதத்திற்கு பதிலுரை மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
2025 26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் (முதல்) குறித்த நிதி ஒதுக்க சட்டமும் வடிவு, அறிமுகம் செய்தலும், ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதலும், (விவாதம் இன்றி) மேலும் ஏனைய சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல் நடைபெறும்.
இன்று காலை பேரவைக்கு வந்த அன்புமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், சிவகுமார், வெங்கடேசன் சட்டமன்ற வளாகத்துக்குள் போராட்டம் நடத்தினர். ஜிகே மணியை சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியதுடன், எ சபாநாயகர் அப்பாவுவிடம் நினைவூட்டல் கடிதம் கொடுத்துள்ளனர்.