சென்னை: சட்டப்பேரவை தொடர் படிப்படியாக முழுமையாக ஒளிபரப்பப்படும் என்ற கூறிய சபாநாயகர், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்த அறிவிப்பையும் சபாநாயக அப்பாவு கூறினார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18ந்தேதி தொடங்கி 24ந்தேதி முடிவடைந்தது. 6 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த அமர்வில், பட்ஜெட் தாக்கல் மற்றும் அதன்மீதான விவாதங்கள் மட்டுமே நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏப்ரல் மாதம் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் வகையில் பட்ஜெட் கூட்டத்தொடர் அமர்வு மீண்டும் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.
அதன்படி, அடுத்த சட்டசபைக் கூட்டத்தொடர் குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது. இதை யடுத்து செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, “தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மே 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்காக ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி மே 10 ஆம் தேதி வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடவுள்ளது என்று கூறினார்.
இந்த அமர்வில் கேள்வி நேரம் மற்றும், முதலமைச்சரின் விதி 100ன் கீழ் அறிவிப்பு மற்றும் முக்கிய நிகழ்வுகள் மட்டுமே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறிய அப்பாவு, படிப்படியாக சபை நடவடிக்கைகள் முழுமையாக ஒளிபரப்பு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதையடுத்து மானிய கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.
அதன்படி ஏப் ரல் 6ல் நீர்வளத்துறை, ஏப்ரல் 7ல் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, ஏப்ரல் 8 ஆம் தேதி கூட்டுறவுத் துறை, உணவுத் துறை, ஏப்ரல் 11 ஆம் தேதி பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறை என துறை வாரியாக கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற உள்ளன.