சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. 2021ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றுகிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. 2021ம் ஆண்டின் முதல்கூட்டம் இன்று தொடங்குகிறது. இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது.‘
இன்றைய கூட்டத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அதனை சபாநாயகர் ப.தனபால் தமிழில் மொழிபெயர்த்து கூறுவார். அத்துடன் இன்றைய கூட்டம் நிறைவடையும்.
அதன்பின்னர், சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடி சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். இதனை சபாநாயகர் முறைப்படி சபையில் அறிவிப்பார்.
இன்றைய ஆளுநர் உரையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பும் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.
அதேவேளையில், முதல்வர், அமைச்சர்கள் மீதுதிமுக அளித்த ஊழல் புகார்கள், வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து திமுக அமளியில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது..
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும், கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.