சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு புதிய உச்சம் பெற்றுள்ளதாக ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார்.
தமிழ்நாடு 9.69% வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தி இந்து ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது! அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது.
அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்! என தெரிவித்துள்ளார்.
2024-25 நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிய வருகிறது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இதுவே மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும். இதற்கு முன்பு அதிகபட்சமாக 2017 – 18 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.59% ஆக இருந்தது. கொரோனா நோய்த்தொற்றால் 2020 – 21 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 0.07% என்ற மிக குறைவான அளவில் இருந்தது. உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த இடங்களில் ஆந்திரா 8.21%, ராஜஸ்தான் 7.82%, அரியானா 7.55% ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இதை வைத்து தி இந்து பத்திரிகை கட்டுரை வெளியிட்டு உள்ளது. அதை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் பெருமிதத்துன் பதிவிட்டுள்ளார்.