சென்னை,
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இந்திய ஆண்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை யுடன் கடந்த கடந்த 23-ந் தேதி கூடியது.
அதைத்தொடர்ந்து அன்று மாலை கூடிய சிறப்பு கூட்டத்தில், வரலாற்று சிறப்பு மிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்கான சட்டம் முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அடுத்த நாளான 24-ந் தேதி முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஜனவரி 27-ந் தேதி கொண்டு வரப்பட்டு, எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கியது.
ஜனவரி 31-ந் தேதி எம்.எல்.ஏ.க்களின் விவாதம் முடிவடைந்தது. தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இறுதியாக தமிழக முதல்வர் ஓபிஎஸ் நேற்று உரையாற்றினார். அதைத்தொடர்ந்து பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் சட்டசபை குழுக்கள் அமைப்பது தொடர்பாகவும் சபாநாயகர் தனபால் அறிவிப்பு செய்தார்.
அதன் பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டத்தை தள்ளிவைக்கும் தீர்மானத்தை அவை முன்னவரும், முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.