கரூர்: ஊழல் செய்வதிலும், கடன் வாங்குவதிலும்தான் தமிழ்நாடு முதல் மாநிலம் என விமர்சனம் செய்த முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி,  செந்தில் பாலாஜி பினாமிகள் 3 ஆயிரம் பார்களில் கள்ள மது விற்றனர் என்று கரூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் குற்றம் சாட்டினார்.

கரூர் மக்களவைத் தொகுதி  அதிமக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  வாக்கு சேகரித்தார். அப்போது, பொது மக்களிடையே உரையாற்றியவர்,  “ ஒரே ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்றவர், என்னை  பச்சைத்துண்டு பழனிசாமி என்று மு.க. ஸ்டாலின் கிண்டல் செய்கிறார்.

விவசாயம் பற்றி அவருக்கு என்ன தெரியும்?. அவருக்கு காய்கறிகளின் பெயர்களை முழுமையாக சொல்லிவிடுவாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பியவர், அதிமுகவை அழித்து விடுவதாக கூறுகிறார்கள்,  ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று ஆவேசமாக கூறியவர், தமிழ்நாட்டு மக்களை பற்றி யோசிக்காமல் தன் குடும்பத்தினர் பதவிக்கு வரவேண்டும் என்று மட்டுமே மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றார்.

வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றி விட்டதாக திமுக பச்சை பொய் கூறுகிறது. ஆனால் திமுக வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை. அதிமுகவில் கொண்டுவந்த திட்டங்களையெல்லாம் மூடுவதுதான் திமுகவின் சாதனையாக உள்ளது.

முதல்வருடனும், அமைச்சர் உதயநிதியுடனும் தொடர்பில் இருந்த ஜாபர் சாதிக் காவல்துறையுடன் தொடர்பை வைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு போதைப்பொருளை கடத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வரும், அமைச்சரும் இதுவரை விளக்கமளிக்கவில்லை. இந்தியாவில் ஊழல் செய்வதிலும் போதை பொருள் விற்பனையிலும் தமிழகம் முதன்மையாக உள்ளது. 

திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. தொழில்கள் எல்லாம் நலிவடைந்துள்ளது. இதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள நிர்வாகதிறனற்ற திமுக அரசுதான் காரணம்.

ஊழல் செய்வதிலும், போதைப்பொருள் விற்பதிலும், கடன் வாங்குவதிலும்தான் இப்போது தமிழக அரசு முதல் மாநிலமாக உள்ளது” கரூரில் செந்தில் பாலாஜி பினாமிகள் 3 ஆயிரம் பார்களில் கள்ள மது விற்றனர்.

ஆயுட்காலம் வரையில் சிறையில் இருக்கும் அளவுக்கு ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி. செந்தில்பாலாஜி பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கி ஆண்டுக்கு சுமார் 3600 கோடி ரூபாயை கப்பம் கட்டியவர் செந்தில் பாலாஜி.

இந்தியாவிலேயே ஊழல் புகாரில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக அரசுதான்.

சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுத்தார்களா?.

மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டதா?.

ஆனால் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தினார்கள்.

அதிமுக கொடுத்த தொடர் அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக அரசு வழங்குகிறது.

வீட்டில் சுவர் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் உரிமைத்தொகையை நிறுத்துவோம் என திமுகவினர் மிரட்டி வருகின்றனர்.

ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது, அதற்கு நான் பொறுப்பு.

உரிமைத்தொகையை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

திமுகவினர் மிரட்டினால் பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.