சென்னை: மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழ்நாடு அரசு தொழில்துறை அமைச்ச டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 30) மின்னணு உதிரிபாகங்கள் (electronic components) உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை (Tamil Nadu Electronics Components Manufacturing Scheme) வெளியிட்டார். இதன்மூலம் சுமார் 60ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழிற்நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கிறோம் என்று உறுதி அளித்துவிட்டு தமிழ்நாடு அரசு கொடுக்காமல் இருந்ததில்லை என்று கூறியதுடன், நடப்பாண்டில், ரூ.1.2 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.
மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றதுடன், ரூ.1.2 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன, நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் மின்னணு உதிரி பாகங்கள் சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்றார்.
இந்த திட்டத்தின்படி, மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு இணையாக இந்த திட்டத்தில் grant வழங்கப்பட்டுள்ளது என்றவர், தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கையால்தான் முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகள் செய்கின்றனர். தமிழ்நாட்டில் மேலும், ரூ.30000 கோடி முதலீடுகளை ஈர்த்து 60000 நபர்களுக்கு வேலை வழங்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.