டெல்லி: நாடு முழுவதும் அதிக தற்கொலை பதிவாகும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. குடும்ப பிரச்சனை மற்றும், உடல்சார்ந்த பிரச்சனைகளால் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 7ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த கால தொடர்களைவிட இந்த தொடர் அமைதியாகவே விவாதங்களுடன் நடைபெற்று வருகின்றன. இந்த நிலை யில், மக்களவையில் தற்கொலை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நலன் துறை மற்றும் மத்திய குற்ற ஆவண காப்பகம் பதில் அளித்துள்ளது.
அதில், கடந்த 2021ம்ஆண்டு நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது இவர்களின் தற்கொலைக்கு முக்கிய காரணம், குடும்ப பிரச்சினை, பணப்பிரச்சனை போன்ற மற்றும் தனிப்பட்ட காரணங்களே என்று சுட்டிக்காட்டி உள்ளதுடன், இவர்கள் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டதன் மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலையில், நாட்டில் இருக்கும் 36 மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. அங்கு கடந்த ஆண்டு 22,207 தற்கொலைகள் பதிவாகி இருக்கிறது.
தற்கொலையில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டில் 18,295 தற்கொலைகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியஅளவில் 11.5 சதவீதம் தற்கொலைகள் தமிழ்நாட்டில்தான் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்டுள்ள 18,295 பேரில், 8,073 பேர் குடும்ப பிரச்சனை களினால் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். குடும்ப பிரச்சனைகளால் தற்கொலை செய்வோரில், நாட்டிலேயே தமிழ்நாட்டு மக்களே முன்னணியில், அதாவது முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உடல்சார்ந்த பிரச்சனைகளால் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையிலும் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், நாடு முழுவதும் தற்கொலை செய்வோரில் தினக்கூலிகள் 25.6 சதவீதம் பேரும் (42,004) அதாவது நாள் ஒன்றுக்கு 115 கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். , அலுவல் பணிக்கு செல்லா குடும்பத் தலைவிகள் 14.1 சதவீதம் பேரும் (23,176), சுய தொழில் செய்வோரில் 12.3 சதவீதம் பேரும் (20,231), வேலைகக்கு செல்வோரும் 8.4 சதவீதம் பேரும் (15,870), 8 சதவீத மாணவர்களும் தற்கொலைக்கு முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.