சென்னை,
முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக மருத்துவமனையில் இருப்பதாலும், தற்போது மீண்டும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாலும், தமிழகத்துக்கு இடைக்கல முதல்வர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதை தொடர்ந்து, அவரது உடல் நிலை தேறும் வரை ஒரு இடைக்கால முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவிப்பார் என உறுதிப்படாத தகவல்கள் வெளியாகி வருகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை, தொடர்ந்து மாநிலம் முழுக்க பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு முதலே அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது. தலைமை செயலாளர் உள்பட உயர் அதிகாரிகள் கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அமைச்சர்களும் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
முதல்வர் உடல்நிலை காரணமாக தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்க, உடனடியாக பொறுப்பு அல்லது இடைக்கால முதல்வரை அறிவிக்க வேண்டிய சூர்நிலையில் ஆளுநர் வித்யாசகர்ராவ் இருப்பதாகவும், அதற்கு தேவையான நடவடிக்களை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
அதற்கு தகுந்தாற்போல், இன்று அதிகாலையிலிருந்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோருடன் ஆளுநர் பேசி வருகிறார்.
முதல்வரை அருகிலிருந்து கவனித்து வரும் சசிகலாவுடன் ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகின்றனர்.
இன்று காலை 9 மணிக்குத் தொடங்கி மூன்று முறை சசிகலா தங்கியுள்ள அறையில் இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இன்று பிற்பகல் அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு, புதிய இடைக்கால முதல்வர் அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.