சென்னை: தமிழகத்திற்கு இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 1கோடியே 10லட்சத்து 34ஆயிரத்து 270 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளன என தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.
தொற்று பரவலை தடுக்க ஒரே வழி தடுப்பூசி எடுத்துக்கொள்வது என உலக சுகாதார வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்களில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்திற்கு இதுவரை 1,17,18,890 தடுப்பூசிகள் வந்துள்ளன. கடந்த 10ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரை 14,92,930 தடுப்பூசிகள் வந்துள்ளன. மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் தமிழகத்திற்கு இன்று மேலும் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன.
தமிழகத்தில் நேற்று (16ந்தேதி) ஒரே நாளில்  3,68,806 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் – 1,10,34,270 பேர்.
நாடு முழுவதும் 16 ஜூன் 2021, இரவு 8.00 மணி  நிலவரப்படி,செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 26.53 கோடிக்கும் மேலாகும். (26,53,17,472) இவற்றில் முதல் டோஸ்: 21.56 கோடி (21,56,57,070)இரண்டாம் டோஸ்: 4.96 கோடி (4,96,60,402) என மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.