சென்னை:

நாட்டிலேயே அதிகப்பட்ச கொரோனா தொற்று  சோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 8,27,980 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலின்படி இந்தியாவில் கடந்த  24 மணி நேரத்தில்  புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 14 516 ஆக உள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,95,048ஆக உயர்ந்து உள்ளது.
நேற்று (19ந்தேதி) ஒரே நாளில் 375 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள்மொத்த  எண்ணிக்கை 12,948ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,13,831 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அனைத்து மாநிலங்களும் கொரோனா சோதனை திறனை அதிகரிக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அறிவுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் இதுவரை  66லட்சத்து 16ஆயிரத்து 496 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில், 1 லட்சத்து 89ஆயிரத்து 869 மாதிரிகளை பரிசோதிக்கப்பட்டு  இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில், இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரத்து 980 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம்தான்.  நேற்று மட்டும்  27,510 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் முதலிடம் வகிக்கும் மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தில் 7,37,597  பேருக்கும்,  ராஜஸ்தான் மாநிலத்தில் 6,67, 643  பேருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் நாள்தோறும் கூடுதலாக பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் இணைந்து இன்னும் கூடுதலாக பரிசோதனை செய்ய முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.