நாகை: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்து சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தில் பல குறைகள் இருப்பதாகவும், இது ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.
ஆனால், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இநத் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் 100 வயதுக்கு மேல் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்களுக்கு அவா்களின் வாழ்நாள் சான்றிதழ் நேரடியாக வீட்டுக்கே சென்று வழங்கப்படுகிறது. அந்தவகையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் கோபாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்நாள் சான்று வழங்கப்பட்டது. கடந்த 1916-ஆம் ஆண்டு பிறந்த கோபாலகிருஷ்ணன், 2-ஆம் உலகப் போரில் இந்திய ராணுவத்தில் மோட்டாா் மெக்கானிக்காக பணியாற்றியவா். பின்னா், சுங்கத்துறை மற்றும் காவல்துறையில் பணியாற்றி, 1972-இல் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெற்று வருகிறாா் என்றார்.
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது எப்போது என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அது குறித்துஅ அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றாா்.