காவல்துறை உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை திடீர் டெல்லி பயணம்.!

Must read

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நாளை காலை 7 மணிக்கு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேசிய நிலையில்,அவரது டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து புதிய ஆளுநராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி. நாகலாந்து மாநில ஆளுநர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு  தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 18ந்தேதி ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார். அன்றைய தினமே செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு பேட்டி அளித்தார்.
பொதுவாக, ஆளுநர், அரசு சம்பந்தமாக ஏதேனும் தகவல் பெற வேண்டுமானால், தலைமைச்செயலாளரை வரவழைத்து பேசுவது  வழக்கம். ஆனால், புதிய ஆளுநர் வழக்கத்துக்கு மாறாக காவல்துறை அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறார். முன்னதாக, கடந்த 20ந்தேதி திமுக கூட்டணி கட்சிகள் மோடி தலைமையிலான மத்தியஅரசுக்கு எதிராக  கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தின. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 21ந்தேதி  காலை 11.00 மணிக்கு, ஆளுநர் ரவி, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவை நேரில் அழைத்து அரை மணிநேரம் பேசியதாகவும், அப்போது, தமிழ்நாட்டின்  சட்டம் ஒழுங்கு பற்றியும், தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் நடத்திய போராட்டங்கள் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, இன்று உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் அழைத்து பேசியதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இது தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  ஆளுநர்  ஆர்.என்.ரவி பொறுப்பேற்று 5 நாட்களே ஆன நிலையில், அவசரமாக நாளை அல்லது நாளை மறுநாள் டெல்லி செல்ல உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகத நிலையில், ஆளுநரின் டெல்லி விசிட் குறித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article