சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று டெல்லி செல்கிறார். அங்கு நாளை பிரதமர் மோடி உள்பட முக்கிய அமைச்சர்களை சந்திக்கிறார்.

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்து வருகிறது. சமீபத்தில், சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில், சென்னை வானகரத்தில், ‘ஹரிவராசனம்’ பாடல் இயற்றப்பட்ட 100-வது ஆண்டை குறிக்கும் வகையில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி,  `சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டதே இந்த பாரதம். மரத்தின் இலைகள், கிளைகளைப் போல, நம்முடைய எண்ணங்கள், செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் வேறுபடலாம். ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை போன்று, மரத்தின் வேர் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் கூறுகிறது. அதுவே கடவுள். மேலும், நமது இந்திய அரசியலமைப்பு சட்டமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது என்று கூறினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு திமுக கண்டனம் தெரிவித்தது.  இதுதொடர்பாக டிஆர் பாலு பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆளுநரின் தனிப்பட்ட ஆன்மீக எண்ணங்கள் என்பவை அவரது தனிப்பட்ட விருப்பங்கள் ஆகும். அவற்றை விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் அரசியல் சட்டத்தின் நீதிநெறிமுறைகளுக்கு உட்பட்ட ஒரு பதவி நிலையில் இருக்கும் ஒருவர் தெரிவிக்கும் கருத்தானது அத்தகைய சட்டத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாகத்தான் அமைய வேண்டும். சட்டத்தை மீறியதாகவோ, சட்டத்தை மீறுவதாகவோ அமையக் கூடாது. இதனை ஆளுநர் அவர்கள் நன்கு அறிவார்கள் என நினைக்கிறேன்.

90 விழுக்காடு மக்களுக்கு எதிரானது சனாதனம். சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்துக்கு எதிரானது சனாதனம். எனவே, அதனை நியாயப்படுத்தி கருத்துகளை உதிர்ப்பது, இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கே எதிரானது ஆகும். அரசியலமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே ஆளுநர்கள் என்றுதான் சொல்கிறது.

அத்தகைய எல்லையை மறந்தும், மீறியும் ஆளுநர் தனது கருத்தளிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது சரியல்ல. திரும்பப் பெறுக மதவாத, சனாதன, வர்ணாசிரம, வன்முறைக் கருத்துகளை ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு தெரிவிப்பது முறையுமல்ல, சட்டமீறல் ஆகும். அவர் ஏற்றுக் கொண்ட பதவியேற்பு உறுதிமொழிக்கு முற்றிலும் முரணானது ஆகும். எனவே, இப்போது சொல்லிய கருத்தை திரும்பப் பெற்று, இனிச் சொல்லாமல் இருக்கவும் உறுதி எடுக்க மாண்புமிகு ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறேன் என கண்டித்திருக்கிறார்.

இந்த நிலையில்,  ,தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் இன்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். தலைநகரில்  நாளை பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் சிலரை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.