டெல்லி: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் அணையை பராமரிக்க அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வள்ளக்கடவு வழியாக செல்ல 5 கிலோ மீட்டர் சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியாறு அணை மூலம் தமிழக கேரள மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த அணை பாதுகாப்பாக இல்லை என கேரள அரசும், பாதுகாப்பாக இருக்கிறது என பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடுத்துள்ளனர். அந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை செய்வதற்கு தமிழக அரசுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு தரவில்லை. அணை பராமரிப்பு ஒத்துழைப்பு அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. இந்த இடைக்கால வழக்கில், முல்லை பெரியாறு அணைக்கு அருகில் இருக்கும் பேபி அணையை பலப்படுத்த வேண்டும் எனவும், முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய 15 மரங்கள் அகற்ற வேண்டியுள்ளது.

ஆனால், கேரள அரசு உரிய ஒத்துழைப்பு தரவில்லை. இது தொடர்பாக முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு குழுவிடம் கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. அதனால் தான் நீதிமன்றத்தில் இடைக்கால மனுவை அளித்துள்ளோம் எனவும், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனுவை அளித்துள்ளது. இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.