திருச்சி:
கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறி உள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திருச்சியில் ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் இதுவரை அரசுக்கு ஆலோசனை தரவில்லை என்றும், உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, முதல்வரின் கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்தார்.
அப்போது, எதிர்கட்சி தலைவர் என்பவர் ஆட்சியாளர்களின் தவற்றை சுட்டிக்காட்டுபவர். மாறாக அவர்களின் செயலை ஆதரித்து மாலையிட்டு மரியாதையா செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
கொரானா தமிழகத்திற்கு வராது என்றார் முதல்வர். இன்று அவரின் அலுவலகத்திற்குள்ளேயே வந்துவிட்டது.
முதல்வர் சேலத்திற்கு மட்டும் செல்வது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிய பின்ரே கோவை, திருச்சி என ஆய்வுக்கு வந்திருக்கிறார் முதல்வர். கொரானோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது.
கொரானா தொடர்பாக உண்மை இல்லாத ஒன்றை, உண்மை போலவே பேசுவதில் சுகாதரத்துறை அமைச்சருக்கு நிகர் வேறு யாறுமில்லை,
திமுக ஆட்சியில் கடுகளவு தவறு நடந்தாலும் மலையளவு எழுதும் ஊடகங்கள், இந்த ஆட்சியில் மவுனமாக இருப்பது ஏன்?.
மேட்டூரில் 43 அடி தண்ணீர் இருந்தபோதே கலைஞர் தண்ணீரை ஜூன்-12 ஆம் தேதி திறந்தார். இன்று 100 அடி இருக்கும்போது தண்ணீரை திறந்து அதை சாதனை என்கிறார் முதல்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.