சென்னை: விலைவாசியை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களைவிட வெகுவாக விலைகளை குறைத்து கட்டுக்குள் வைத்து சாதனை படைத்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது முதல் உலக நாடுகளில் அனைத்து விதமான உணவுப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன. இந்த போர் காரண மாக, உலகளாவிய உணவு தானியங்களின் விநியோக சங்கிலியில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதால், உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதாக கூறப்படு கிறது. அதுபோல இந்தியாவிலும் உணவுப்பொருட்கள் விலை  அதிகபட்சமாக 12.6  விழுக்காடு அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது.

அதன்படி,  நெல் , உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பால், சர்க்கரை, முட்டை – பண்ணை இறைச்சி ஆகிய உணவுப் பொருட்களின் உலகாளவிய விலைகளில் மாற்றம் ஏற்பட்டு உயர்ந்துள்ளது.   கடந்த மார்ச் மாதம், உணவு விலை குறியீட்டு எண் ஒட்டுமொத்தமாக 17.9 புள்ளிகள் உயர்ந்து 159.3 ஆக கணக்கிடப் பட்டுள்ளது.  இந்த குறியீட்டு எண்களில் அதிகபட்ச அதிகரிப்பு சமையல் எண்ணையில் (தலா 46.8 புள்ளிகள், 23% வளர்ச்சி) ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவிலேயே உணவுப்பொருட்களின் விலை மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காய்கறிகள், இறைச்சி மற்றும் தானியங்களின் விலை, பிரதமர் மோடியின் குஜராத் உள்பட வட மாநிலங்களில் 11.5 சதவிகிதம் முதல் 27.6 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் உணவுப்பொருட்களின் விலை தேசிய சராசரிக்கும் குஏறைவாக 4.1 சதவிகிதமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களை விட உணவுப்பொருட்களின் விலை குறைத்து சாதனை படைத்துள்ளது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.