மன்னார்குடி: பருத்தி கொள்முதலுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் விலை நிர்ணயக்குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

பருத்தி கொள்முதலை மத்தியஅரசு செய்து வருகிறது. மேலும் தனியார் நிறுவனங்களும் பருத்தி கொள்முதலை செய்து வருகின்றன. மத்தியஅரசின் தகவலின்படி, கடந்த 2024 – 25 பருவமான மார்ச் 31 வரை, குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ், நாடு முழவதும் 100 லட்சம் பேல்களுக்கு (ஒரு பேல் என்பது 170 கிலோ) சமமான 525 லட்சம் குவின்டால் விதை பருத்தியை மத்திய ஜவுளித்துறை அமைச்சத்தின் கீழ் செயல்படும் இந்திய பருத்திக் கழகம் கொள்முதல் செய்துள்ளது.
இந்த கொள்முதல் மதிப்பிடப்பட்ட மொத்த பருத்தி உற்பத்தியான 294.25 லட்சம் பேல்களில் 34 சதவீதமாகும். மொத்தத்தில், கொள்முதல் வாயிலாக பருத்தி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் உள்ள 21 லட்சம் பருத்தி விவசாயிகளுக்கு 37,450 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை தமிழ்நாடு அரசே மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் தோட்டக்கலை பயிர்கள் பருத்தி உட்பட சந்தைப்படுத்துவதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க முன் வருவதில்லை என்று கூறியவர், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் விலை நிர்ணயக்குழு அமைக்க வேண்டும் என கூறினார்.
தற்போது விலை குறைவால் மாம்பழம் அழிந்துவிட்டது, மாம்பழம் விளைவித்த விவசாயிகள் கடன்காரர்களா உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல், காலங்கடந்து மத்திய அரசிடம் தமிழக அரசு முறையிட்டுள்ளது.
ஏற்கனவே கர்நாடகா ஆந்திர மாநிலங்கள் காலத்தில் நடவடிக்கை எடுத்து மாம்பழ கொள்முதலுக்கு உரிய உத்தரவாதம் அளித்தது. மாம்பழகூல் தொழிற்சாலை களை மாநில அரசுகள் நேரடி கண்காணிப்பில் செயல்படுத்து வருகின்றன. ஆந்திரா அரசு மாம்பழம் கிலோ ஒன்றுக்கு நாலு ரூபாய் கூடுதலாக மாநில அரசே விலை கொடுத்து கொள்முதல் செய்ய முன்வந்துள்ளது. கர்நாடகாவில் மத்திய அரசின் நிவாரணம் பெற்று விவசாயிகளை இழப்பிலிருந்து பாதுகாத்துள்ளனர்.
ஆனால், தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கண்டுகொள்ளாத நிலையே உள்ளது. குளிர் சாதன கிடங்குகள் செயல்படவில்லை , மாம்பழக்கூழ் தொழிற்சாலையில் மூடி கிடக்கின்றன. இது குறித்து தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகள் போராட்டம் காரணமாக, தமிழ்நாட்டில் மாம்பழ விற்பனைக்கு காலம் கடந்து தான் தமிழக அமைச்சர் மத்திய உணவு துறை அமைச்சரை சந்தித்து கோரிக்க வைத்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் காவிரி டெல்டாவில் பருத்தி அறுவடை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொள்முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் மத்திய அரசின் பருத்தி கழகம் ஒரு கிலோ பருத்திக்கு 70 ரூபாய் 21 பைசா விலை நிர்ணயம் செய்து உள்ளது. பின்னலாடை நிறுவனங்கள் அதிகம் உள்ள ஈரோடு திருப்பூர் போன்ற மாவட்டங்களில் குவிண்டால் பருத்தி ரூ.15,000 வரையிலும் விலை போகிறது. ஆனால் உற்பத்தி செய்கிற இடங்களில் விவசாயிகளிடம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இடைத்தரகர்கள் அதிகாரிகள் கூட்டணி அமைத்து அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.
ஒரு கிலோ பருத்தி ரூ.30 முதல் ரூ.40 அளவில் அடி மாட்டு விலைக்கு கொள்முதல் செய்கிறார்கள். பருத்தி எடுப்பு கூலியே ரூ.30 முதல் 40 வரையிலும் கொடுக்க வேண்டிய நிலையில், கொள்முதல் விளையும் அதே விலையில் சராசரி விலையில் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
மத்திய அரசின் பருத்திக் கழகம் நேரடியாக கொள்முதல் செய்ய காவிரி டெல்டாவிற்கு வர மறுக்கிறது. காரணம் கொள்முதல் செய்யும் பருத்தியை கொண்டு செல்வதற்கான லாரி வாடகையை தமிழக அரசு ஏற்க மறுப்பதால் கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள். எனவே இது குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
பருத்தி விவசாயிகள் வாரக்கணக்கில் கொள்முதல் நிலைய வாயில்களில் உள்ளிருப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். காவல்துறையினர் விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றனர்.
உற்பத்தி பொருளுக்கு விலை கிடைக்காமல் போராடும் விவசாயிகளுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு மறுத்து காவல்துறையை பயன்படுத்துவது ஏற்க முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை தடுத்து தமிழ்நாட்டுக்குள் விளைவிக்க கூடிய தோட்டக்கலை பயிர்களான காய்கறிகள், மா, பருத்தி உள்ளிட்ட பயிர்களை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் விலை நிர்ணய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
குறைந்தபட்ச விலையில் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் இடங்களில் அதற்கு ஏற்றவாறு விற்பனை செய்வதற்கான நடைமுறைகளையும் கண்காணிக்க தமிழக அரசு அவசர கால நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் உற்பத்தி செய்யும் இடத்தில் அடிமாட்டு விலைக்கு வாங்கி சந்தைப்படுத்தும் இடத்தில் பல மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிப்பதை தடுக்க முடியும். விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும்.
வேளாண் துறையின் கட்டுப்பாட்டில் இருக்குற பல்வேறு துறைகளை இணைத்து மாவட்ட அளவில் இக்குழுக்கள் அமைப்பதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு குறைந்தபட்ச விலை உத்தரவாதத்தை ஏற்படுத்த முடியும். எனவே, உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
போலி விவசாயி யார்? பொது மேடையில் விவாதிக்க முதல்வர் ஸ்டாலினை அழைக்கிறார் பி.ஆர்.பாண்டியன்…