டெல்லி :
தப்லிக் ஜமாத் எனும் இஸ்லாமிய மத வழி காட்டுதல் அமைப்பு, கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15 வரை டெல்லி நிசாமுதீனில் நடத்திய கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதாகவும் அதில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாலும், அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பி வந்தவர்களை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தேடிவருவதோடு, அவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்தப் பட்டுவருகிறது.
தென் மாவட்டங்களான, மதுரை, விருதுநகர், தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் டெல்லியில் நடந்த இந்த கூட்டத்திற்கு பலர் சென்று வந்திருப்பதாக தகவல் வெளியானது.
தப்லிக் ஜமாத் எனும் அமைப்பு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த பிப் 27 முதல் மார்ச் 1 வரையிலும், இந்தோனேஷியாவில் உள்ள மகாசர் எனும் இடத்தில் மார்ச் 17 முதல் 19 வரையிலும் இதுபோன்ற கூட்டங்களை நடத்தியுள்ளது தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் மார்ச் 22 முதல் 24 வரை இந்த கூட்டம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தியாவை சேர்ந்த தப்லிக் ஜமாத் அமைப்பானது தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் பல ஆண்டுகளாக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மத சம்மந்தப்பட்ட கூட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது பல்வேறு இடங்களுக்கு சென்று நடத்துவது வழக்கம்.
மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் 1500 வெளிநாட்டினர் உள்ளிட்ட 16000 பேர் கலந்துகொண்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது, மேலும் மலேசியாவில் 673 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு, கிட்டத்தட்ட 450 பேர் இந்த கூட்டத்திற்கு சென்று வந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மார்ச் 17 முதல் 19 வரை இந்தோனேசியாவில் நடக்க இருந்த கூட்டத்திற்கு சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 8000 பேர் வந்த நிலையில் , மலேசியாவில் நடந்த சம்பவங்களை கேள்விப்பட்ட இந்தோனேஷியா அரசாங்கம் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்து ரத்து செய்தது.
மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் தங்கள் கூட்டங்களை முடித்துவிட்டு டெல்லிக்கு வந்த குழுவினரிடமிருந்து இந்த நோய் தொற்று இங்கு கலந்துகொண்ட மற்றவருக்கும் பரவியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, டெல்லியில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்று தமிழகம் திரும்பிய அனைவரையும், தாங்களாக முன்வந்து தங்களின் குடும்பம் மற்றும் உறவினர்களின் நலன் கருதி சுய பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளது.