டெல்லி: ஒருமுறை பயன்படுத்தும் காகித கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தமிழ்நாடு அரசின் தடை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு, ஒரு முறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கு விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், இன்று தமிழ்நாடு அரசின் ஒருமுறை பயன்படுத்தும் காகித கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை சரியே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என்று உத்தரவிட்டுள்ள்ளது.
அத்துடன்க, பேப்பர் கப்புகள் மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சியின்போது, அதாவது 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வணிகர்கள் தரப்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு தமிழ்நாடு அரசின் தடை செல்லும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, வணிகர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ள உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் தடை செல்லும் என்றும், அதே வேளையில் பேப்பர் கப்புகள் மீதான தடை குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது.