சென்னை: தலைநகர் சென்னையின் குடிநீர் தேவைக்கு, கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட கோரி ஆந்திர மாநில அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி உள்ளது.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, ஜூலை முதல் 8 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதற்கிடையில் வெயில் காலம் என்பதால், சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி உள்பட பல ஏரிகளில் நீர் இருப்பது குறைவாக உள்ளது.
இதையடுத்து, கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை திறந்து விடும்படி தமிழ்நாடு அரசு ஆந்திர மாநில நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. ஆண்டுதோறும் வழங்க வேண்டிய தண்ணீரில் இந்தாண்டு குறைவாக தண்ணீரே வழங்கியுள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.