சென்னை: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025ஐ செயல்படுத்தும் விதமாக 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டு முதல் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என்றும் முந்தைய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் 2030-ம் ஆண்டு வரை அரியர் தேர்வு எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்தும் விதமாக நடப்பு கல்வியாண்டு முதல் (2025 – 26) 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2017-18 கல்வி ஆண்டிற்கு முன்னர் இருந்த நடைமுறையே பின்பற்றப்படும். ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அல்லாமல் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ செயல்படுத்தும் விதமாக 2025- 26ஆம் கல்வி ஆண்டு முதல் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான அரசு பொதுத் தேர்வினை ரத்து செய்தல் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கு முறையை மாற்றி அமைத்தல் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அரசு முதன்மைச் செயலாளர் சந்தர மோகன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் 10 + 2 + 3 என்ற முறையினை நடைமுறைப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக, மார்ச் 1980 முதல் முறையாக மாநில அளவில் மேல்நிலை ரெண்டாம் ஆண்டிற்கான பொதுத் தேர்வினை நடத்திட ஆணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து 2017 – 2018ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு பொதுத் தேர்வு நடத்த ஆணை வெளியிடப்பட்டது.
இதற்கிடையே மாணவர்களின் நலன் கருதியும் பொதுத் தேர்வு தொடர்பான எவ்வித பதற்றங்கள் இல்லாமலும், மேல்நிலைக் கல்வியை உறுதியுடன் அவர்கள் கற்பதற்காகவும், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-னை செயல்படுத்தும் விதமாக 2025 2006ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாம் ஆண்டுப் பொதுத்தேர்வினை ரத்து செய்து ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025 செயல்படுத்தும் விதமாக கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது.
2025- 2026ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாம் ஆண்டின் பொதுத் தேர்வு இரத்து செய்யப்படுகிறது.
2025-2026 கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு, 2017- 2018ஆம் கல்வியாண்டிற்கு முன்னர் இருந்த நடைமுறையைப் பின்பற்றி தேர்வு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.
2025- 2026ஆம் கல்வியாண்டில் இருந்து மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை மாற்றி, அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதிய பின்னர் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை மட்டும் உள்ளடக்கிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் ஏற்கனவே 11ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மட்டும் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான அரசுப் பொதுத் தேர்வினை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது மார்ச் 2030 வரையில் தொடர்ந்து நடத்த அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுவதாக அரசு முதன்மைச் செயலாளர் சந்தர மோகன் தெரிவித்துள்ளார்.