சென்னை: திருமணங்களை புதுமண தம்பதிகளே இனி ஆன்லைனில் பதிவு செய்யும் வகையில், தமிழக அரசு புதிய திட்டத்தை தொடங்க உள்ளது. இதற்கான பதிவுத்துறையின் சாப்ட்வர் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் கடந்த 2009-ல் தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. மத்திய மாநில அரசுகள் வழங்கும், திருமண உதவித்தொகை, பேறுகால நிதி மற்றும் வெளிநாட்டு விசா உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கு தேவைப்படுவதாவல் திருமண சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் திருமணம் செய்பவர்கள், இதை பதிவு செய்ய வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து திருமணம் செய்த தம்பதிகள், அதற்கான ஆதாரங்களுன் பத்திரப்பதிவு அலுவலகங்களில் தாக்கல் செய்து திருமண சான்றிதழ் பெறலாம். அல்லது இந்த சட்டத்தின் கீழ், பதிவு அலுவலகங்களில் திருமணங்களை செய்து கொள்ளலாம். மேலும், திருமணம் முடிந்த தம்பதிகள் 90 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டும். 150 நாட்களுக்குள் பதிவு செய்யாதவர்கள் பின் எப்போதுமே தங்கள் திருமணத்தைப் பதிவுசெய்ய இயலாது. திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் அரசின் திருமண உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கமுடியாது. திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுக்கவும் இந்த சட்டம் வழிவகுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு இந்த திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்திலும் திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பதிவுத்துறையில் பெறும் சான்றிதல் பெறுவதில் புதுமண தம்பதிகள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்தால்தான் சான்றிதழ் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. திருமண பதிவுக்கு ரூ.200 கட்டணமாக உள்ள நிலையில், திருமண தம்பதியினரின் வாழ்க்கை தரத்தை பார்த்து, ரூ.10 ஆயிரம் வரை லஞ்சமாக கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், திருமண சான்றிதழ் விவகாரத்தில் அரசின் பதிவு சட்டம் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது.
இதையடுத்து, முறைகேடுகளை களைய முனைந்த தமிழ்நாடு அரசு, திருமண பதிவுகளை பொதுமக்களே நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர உள்ளது.
இந்த புதிய முறைப்படி, தம்பதிகள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வர தேவையில்லை. பத்திர எழுத்தர்கள் மூலமாக அல்லாமல் தாங்களே நேரடியாக வீட்டிலிருந்து பதிவு செய்யலாம். இதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி விடலாம். திருமணத்திற்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், உடனடியாக சான்றிதழும் வழங்கப்பட்டுவிடும்.
இந்த திட்டம் முதலில் தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும் என்றும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
பத்திரப் பதிவுத்துறையில் தற்போதுள்ள ஸ்டார்-2 சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்டு, விரைவில் ஸ்டார்-3 கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வரும்நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளன.
இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதன்பிறகு, இந்த ஆன்லைன் திருமணப்பதிவு வசதி மூலம், புதுமண தம்பதியினரின் அலைச்சல் மிச்சமாவதுடன், மோசடி திருமணங்கள் தடுக்கப்படும் என்றும், சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைப்படியும் முறையாக திருமணங்கள் பதிவு செய்யப்படும் என்றும் தமிழக அரசு நம்புகிறது.