டெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி.க்கு 27% இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில்,  தமிழகஅரசு வாதாட தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க, திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டது. ஆனால், மத்தியஅரசு நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படடது, அதை விசாரித்த நீதிமன்ற அமர்வு,  ‘மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஒபிசி. பிரிவுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்க கூடியதுதான். அதே நேரம், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு, மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது.  அதனால், உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அந்த இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது,’ என தீர்ப்பளித்தது.

இதையடுத்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு, ‘பொருளா தாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% கூடுதல் இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது?’ என சரமாரியாக கேள்வி எழுப்பியது. அதற்கு மத்தியஅரசு, குழுவின் அறிக்கையின்படி கொடுக்கப்பட்டதாக கூறி, அதற்கான ஆவனங்களையும் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், ஓபிசி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிக்கையை திமுக தரப்பு நேற்று (23ந் தேதி) தாக்கல் செய்தது. அதில்,  ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கப்படும் 10 சதவீதம் இடஒதுக்கீடும், ஓபிசி.க்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீடும் வெவ்வேறு. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது என்று கூறப்பட்டது.

அப்போது மத்தியஅரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்பதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்,’ என கோரினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘இந்த வழக்கில் எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க தயாராக இருக்கிறோம். எங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு இன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.