சென்னை அமலாக்கத்துறையின் ரெய்டு தொடர்பான டாஸ்மாக் வழக்கில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துகிறது, உயர்நீதிமன்றத்தை அவமானப்படுத்துகிறது என பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

அமலாக்கத்துறையினர் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் 3 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், முதற்கட்டமாக ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது என செய்தி வெளியிட்டது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில், அமலாக்கத்துறை சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை முதலில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்த நிலையில், எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்களையும் அமலாக்கத்துறை தெரிவிக்க உத்தரவிட்டு இருந்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து புதிய நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
அதன்படி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. கடந்த விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை விமர்சித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை 8-ந்தேதி (இன்று) மற்றும் 9-ந்தேதி (நாளை) நடைபெறும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசு சார்பில், அவசரம் அவசரமாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், டாஸ்மாக் வழக்கு இன்று மீண்டும், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இன்று காலையில் சுமார் 11 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை 12.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது, அரசு தரப்பில், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில், அடுத்த சில நிமிடங்களில் விசாரணைக்கு வர உள்ளது. அதனால், இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும்” என்று மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ”அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, பொதுநலனுக்காகவா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகளுக்காகவா? இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு ஏன் அவகாசம் கேட்டது. டிவிசன் பெஞ்சில் விசாரிப்பதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன்,
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, தமிழ்நாடு அரசு தரப்பில், ஒரு கருத்தையும் தெரிவிக்காமல், உச்சநீதி மனற்த்தில், தமிழ்நாடு அரசு திடீரென வழக்கு தொடர்ந்த காரணம் என்ன? அந்த காரணத்தை முதல் நாளே இந்த நீதி மன்றத்தில் தெரிவித்து இருக்கலாமே? ஏன் அதை செய்யவில்லை?
தமிழ்நாடு அரசு சட்ட நடைமுறையை ஏன் தவறாக பயன்படுத்துகிறது? இந்த நீதிமன்றத்தை ஏன் அவமானப்படுத்த வேண்டும்? இன்று காலையில் கூட சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை ஏன் எங்களுக்கு சொல்லவில்லை? இறுதி விசாரணைக்கு பட்டியலிட்ட பிறகு சுப்ரீம் கோர்ட்டு ஏன் செல்ல வேண்டும்.
உச்சநீதி மன்றத்தை தமிழ்நாடு அரசு அணுக உரிமை உள்ளது. அதேநேரம், அதுகுறித்து தமிழ்நாடு அரசு ஏன் உயர்நீதி மன்றத்தில், தகவல் தெரிவிக்காமல் செல்ல வேண்டும்?” என்று சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.
அதற்கு அரசுதரப்பு வக்கீல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குதான் அமலாக்கத்துறை பதில் மனு அரசுக்கு கிடைத்தது. அதன்பின்னர், அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என்றார். இதையடுத்து, இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிப்பதாக கூறி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
டாஸ்மாக் ரெய்டு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரணை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு