சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை கடைகளில் ஆவின் பால் பொருட்கள்  விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஆவின் நிர்வாகம் பால், தயிர், நெய், வெண்ணெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஆவின் பொருட்களின் விற்பைனை மேலும் அதிகரிக்கும் வகையில் ஆவின்  நிறுவனம் தனது பால் உபபொருட்களை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நடப்பாண்டு நிதியாண்டு மட்டும்,  ரூ. 524 கோடி மதிப்பில் ஆவின் பால் மற்றும் பால் உபபொருள்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக கூறும் ஆவின் அதிகாரிகள், ஆவின் பால்பொருட்களின்  விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் கடந்த சில மாதங்களாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகளை மொத்த விற்பனையாளர்களாக நியமித்து அவர்களின் மூலம் ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவத்தனர். இதனால் தற்போது மேலும்,  20 சதவீதம் விற்பனை உயர்ந்துள்ளது என கூறியதுடன்,  விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆவின் பொருள்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும்,  இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்து உள்ளனர்.

ரேசன் கடைகள் மூலம் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்தால்,  மாதந்தோறும் ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.