சென்னை: காய்கறி, மளிகை மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு நேர கட்டுப்பாடு விதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே செல்வதற்கு ஏற்ற, நடவடிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக அரசு எடுத்து வருகிறது.
அதன்படி, காய்கறி கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் இயங்க நேர கட்டுப்பாடு விதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிவிப்பில் அவர் மேலும் கூறி இருப்பதாவது: பெட்ரோல் பங்குகள், கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணிவரை செயல்பட வேண்டும்.
ஆனால் மருந்தகங்கள், உணவகங்கள் வழக்கம்போல் நாள் முழுவதும் செயல்படும். அவற்றுக்கு நேர, கட்டுப்பாடுகள் கிடையாது. இதேபோன்று, ஸ்விக்கி, ஜுமேட்டோ, ஊபர் ஈட்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேற்கூறிய நிறுவனங்கள் போலீசாரிடம் இருந்து, தங்கள் விநியோக நிர்வாகிகளுக்கான பாஸ்களை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு நாளும் அவர்களின் உடல்நிலையை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த நிறுவனங்கள், பொதுமக்களுக்கு உணவு விநியோகிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வரும் ஞாயிறு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. தவிர்க்க முடியாத இறுதி சடங்குகள் மற்றும் பிற விழாக்களில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தேவையின்றி மக்கள் வெளியே செல்ல தடை விதிக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.