சென்னை: தமிழ்நாடு அரசு சென்னைக்கு வெளியே மதுராந்தகம் பகுதியில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான டெண்டர் கோரி உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்த தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் (2025) மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழகத்திற்கு பன்முக வளர்ச்சி திட்டங்கள் கொண்ட அந்த பட்ஜெட்டில், இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக இருக்கக் கூடிய தமிழகத்தின் தலைநகரமான சென்னை அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வீட்டு வசதிகள் மற்றும் பூங்காக்கள் கொண்ட புதிய குளோபல் சிட்டி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி 2000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 5 இடங்களை அடையாளம் காணப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு அந்த அறிக்கை டிட்கோவுக்கு சமர்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.