சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு  2வது முறையாக மீண்டும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு  செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி உச்சநீதி மன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.இந்தமனுமீது கடந்த அக்டோபர் 10ந்தேதி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடையில்லை என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் மீண்டும் சிபிஐ விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.  தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம்ஸ்டிராங் மனைவி பொற்கொடியும், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது விவாதப்பொருளாக மாறி உள்ளது.

முன்னதாக,  கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங்கை சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடா்பாக சென்னை காவல்துறை 27 பேரைக் கைது செய்து 7,087 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. மேலும் இந்த கொலை வழக்கில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் குற்றவாளிகள் திடீரென என்கவுண்டர் செய்யப்பட்டதும், வழக்கு மீதான சந்தேகங்களை மேலும் அதிகப்படுத்தியது.

இதையடுத்து,   சென்னை காவல்துறையின் விசாரணை ஒருதலைப்பட்சமானது என்றும், செல்வாக்கு மிக்கவா்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்றும் குற்றம் சாட்டி, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினா் சிபிஐ விசாரணை கோரி வந்தனா். மேலும், இந்த வழக்கை சென்னை காவல்துறை முறையாக விசாரிக்கத் தவறிவிட்டதாக ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரா் கே. இம்மானுவேல் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி. வேல்முரூகன், ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையின் விசாரணையில் பல குறைபாடுகள் இருப்பதாக குறிப்பிட்டு இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி உத்தரவிட்டாா். மேலும், ஆறு மாதங்களுக்குள்ளாக வழக்கை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் அவா் சிபிஐக்கு உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுக்கு எதிராக இடைக்காலத் தடை கோரியும், சிபிஐ விசாரணை உத்தரவை ரத்து செய்யவும் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன்  ஏற்கனவே (அக்டோபர் 7ந்தேதி) அன்று  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, நீதிபதிகள், “ஹைகோர்ட்டின் சிபிஐ விசாரணை உத்தரவு நீடிக்கும்; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எந்தத் தடையும் இல்லை” என்று தெளிவுபடுத்தினர்.

இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு உத்தரவிட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக  (அக்டோபர் 28ந்தேதி) மனுத்தாக்கல் செய்து உள்ளது.

 அரசின் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரது மனைவி பொற்கொடி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.  அதில்,  தமிழ்நாடு அரசின் கோரிக் கையை ஏற்க கூடாது என்றும், இந்த வழக்கின் விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து  கண்காணிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.