நாகை,

நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களை கொண்டுசெல்லும் அமரர் ஊர்தி இல்லாததால், 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு  இறந்தவரின் உடலை தூக்கிச்சென்ற கொடுமை நடைபெற்றுள்ளது.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாததால், போஸ்ட்மார்டம் செய்யப்பட்டவரின் உடலை 6 கிமீ உறவினர்கள் தூக்கி சென்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில்தான் இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. ஆனால், தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டம் மணியன் தீவு கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்தவுடன், அவரது வீட்டிற்கு உடலை செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகத்திடம் அமரர் ஊர்தி கேட்கப்பட்டது. அப்போதுதான்  அந்த மருத்துவமனையில் அமரர் ஊர்தியே கிடையாது என்ற தகவல் தெரிய வந்தது.

இதன் காரணமாக தனியார் வாகனம் மூலம் இறந்தவரின் உடலை எடுத்துச்செல்ல முடியாத நிலையில், வேறு வழியின்றி இறந்தவரின்  உடலை மருத்துவமனையிலிருந்து சொந்த ஊருக்கு தூக்கிச் சென்றனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

இதுபோன்ற நிகழ்வுகள் ஒரிசா, பீகார் போன்ற வடமாநிலங்களில்தான் நடைபெற்று வந்தது. தற்போது, அதுபோன்ற ஒரு நிகழ்வு தமிழகத்திலும் நடைபெற்றிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.