சென்னை: தமிழக வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்தியகுழு நேற்று தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து இன்று 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறது. அதையடுத்து, ஒரு குழு குமரி மாவட்டம் சென்று ஆய்வு செய்ய உள்ளது. பின்னர், 24ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. கனமழையால் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களும் பாதிப்பை சந்தித்துள்ளது. மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் பாதித்த 14 மாவட்டங்களில் மொத்தம் 419 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 34,397 பேர் தங்கியுள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் மாநில அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மழைவெள்ளம் வடியாக பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதித கன மழையால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பை சந்தித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தய அரசு அமைத்த 7 பேர் அடங்கிய மத்திய குழு நேற்று முன்தினம் மாலை தமிழகம் வந்தது. மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான இந்த குழுவில், மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை ஐடி பிரிவு இயக்குனர் விஜய் ராஜ்மோகன், சென்னையில் உள்ள மத்திய நீர்வள அமைச்சகத்தின் நீர் ஆணையத்தின் இயக்குனர் ஆர்.தங்கமணி, டெல்லி மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே, சென்னையில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரணஞ்ஜெய் சிங், மத்திய ஊரக வளர்ச்சி துறை சார்பு செயலர் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் உள்ளனர்.
இந்த குழுவினர் நேற்று தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர் இறையண்பு உள்பட அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியது. பின்னர், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 4.45 மணிக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மழைவெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்பட காட்சிகளை பார்வையிட்டது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகளுடன் குழு ஆலோசனை நடத்தியது. இந்த குழு இரண்டாக பிரிந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் குமரி மாவட்டங்களை இன்று பார்வையிடுகிறது. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை இரண்டு குழுவாக பிரிந்து பார்வையிடுகிறது.
முதல் குழுவில் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா, விஜய் ராஜ்மோகன், ரணஞ்ஜெய் சிங், வரப்பிரசாத் ஆகியோர் உள்ளனர். இரண்டாவது குழுவில் ஆர்.பி.கவுல், ஆர்.தங்கமணி, பவ்யா பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முதல் குழுவிற்கு வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டியும், இரண்டாவது குழுவிற்கு வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் குமார் ஜெய்ந்தும் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழிநடத்தி செல்ல உள்ளனர்.
இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையில் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்(வரதராஜபுரம்) ஆகிய மாவட்டங்களில் பார்வையிடுகிறது. பின்னர், 2.45 மணியளவில் பாண்டிச்சேரி சென்று அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறது.
கே.பி.கவுல் தலைமையிலான இரண்டாவது குழு இன்று காலை 7.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறது. அங்கு சாலை மார்க்கமாக கன்னியாகுமரி சென்று அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறது.
இரு குழுக்களும் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, விவசாயிகள் மற்றும் வீடு இழந்தவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து சேத விவரங்களை கேட்டறிய உள்ளனர். இதைத்தொடர்ந்து, நாளை காலை 10 மணி முதல், முதலாவது குழு கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும், பயிர் சேதங்களையும் பார்வையிடுகிறது. இரண்டாவது குழு மதியம் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, இரவு 10.30 மணிக்கு குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.
தொடர்ந்து, 24ம் தேதி காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். பின்னர், அன்றைய தினம் மாலை 4.15 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறது.