எல்லை தாண்டியதாகச் சொல்லி இலங்கை அரசு கைப்பற்றி வைத்திருக்கும் தமிழக மீனவர் படகுகளை அரசுடமையாக்கயிருக்கும் இலங்கை அரசை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனுசனையும் கடிப்பது போல, தமிழக மீனவர்களின் 120 படகுகள் அரசுடமை ஆக்கப்படும் என்று தமிழ் இனக்கொலைகார சிங்கள அரசின் அமைச்சரான மகிந்த சமரவீரா அறிவித்துள்ள செயல் இந்திய அரசுக்கே விடப்பட்ட சவலாகும்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக, குறிப்பாக கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை தமிழக மீனவர்கள் 700க்கும் மேற்பட்டோரை இலங்கைக் கடற்படை நமது கடல் எல்லையிலும், அனைத்துலக கடல் பிரதேசத்திலும் சுட்டுப் படுகொலை செய்தது. தமிழக மீனவர்களின் படகுகளை மீனவர்களோடு சேர்த்து சிறை பிடித்து, மீனவர்களை இலங்கைச் சிறைகளில் அடைப்பதும், படகுகள் பாழாகும் நிலை ஏற்படுத்துவதும், ஒவ்வொரு முறையும் இந்திய அரசு இலங்கை அரசிடம் தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு பிச்சை கேட்டு மன்றாடுவதும் வெட்கக் கேடானது.
உலக அணு ஆயுத வல்லரசுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுவிட்டது என்றும், சந்திரனுக்கே நாங்கள் விண்வெளிப் பயணம் செய்யப்போகிற அளவுக்கு வலிமை பெற்றுவிட்டோம் என்றும் கூறி வருகிற இந்திய அரசு, சுண்டைக்காய் இலங்கை நாட்டின் நட்புறவு வேண்டும் என்பதற்காக முன்னைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈழத் தமிழ் இனப் படுகொலையின் கூட்டுக் குற்றவாளியாக உதவியது.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் நாசகார சிங்கள அரசின் நட்புக்காக ஈழத் தமிழர் நலன்களை பலியிட்டு வருகிறது. இம்மாதம் (டிசம்பர்) 15ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நான் நேரில் சந்தித்து, இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை சிறை பிடிப்பதுடன், 7 கோடி இந்திய ரூபாய் அளவுக்கு 2017 ஜனவரியில் இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப் போவதை இந்திய அரசு தடுத்தே ஆகவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினேன்.
குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்ததாம் என்பது போல, தமிழக மீனவர்களின் படகுகளை சிங்கள அரசுடமை ஆக்கப் போகிறோம் என்று அகம்பாவத்தோடும், திமிரோடும் அறிவிக்கிற துணிச்சலுக்கு இந்திய அரசின் அணுகுமுறைதான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறேன். இது இந்திய அரசுக்கு இலங்கை அரசு விடுத்துள்ள சவாலாகும் என்பதை பிரதமர் உணர வேண்டும்.
இலங்கையின் இந்த விபரீதப் போக்கை இந்திய அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாகவே இந்திய அரசு கருதவில்லையோ என்ற கேள்வி தமிழக மீனவர்கள் மனதில் மட்டுமல்ல, தமிழக மக்களின் மனதிலும் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்த்து, இந்திய அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் பின் விளைவுகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டையே கேள்விக்குறியாக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.