சென்னை: தமிழக மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கை மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டள்ளது. இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ என்பவர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவில்,   கடந்த 1974ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், கச்சத்தீவுக்கு புனிதப் பயணம் செல்லும் பக்தர்களை, எந்தவிதப் போக்குவரத்து ஆவணங்களும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் எனவும்; இந்திய – இலங்கை கப்பல்கள், இரு நாட்டு கடல் பகுதிகளில் செல்ல உரிமை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப் பிரிவுகளை அமல்படுத்தக்கோரியும் இலங்கை அரசால் கைது செய்யப் பட்டுள்ள 68 மீனவர்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரியும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி  அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  கச்சத்தீவு ஒப்பந்தத்தின் இந்தப் பிரிவுகள் முறையாக அமல்படுத்தப்படாததால், இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கருத்துதெரிவித்த  உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதி, தமிழக மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை; பிறநாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போது இந்திய அரசு அவர்களைக் கைது செய்வதாகவும், அதுபோல அண்டை நாடுகளும் எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்து வருகிறது என்று  குறிப்பிட்டார்.

இதையடுத்து, இந்த மனவை இதே கோரிக்கையுடன் மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இ சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.