மேட்டுப்பாளையம்: கோவை அன்னூர் பகுதியில் தமிழகஅரசு தொழிற்பூங்கா அமைக்கப்படும் என அறிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 கிராம பொதுமக்கள், விவசாயிகள் போராடம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று தமிழகவிவசாயிகள் சங்கம் சார்பில் 6 கிராம ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலர் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் ஏராளமான கம்யூனிஸ்டு தொண்டர்களும் பங்கேற்றுள்ளனர்.
கோவை அருகே உள்ள அன்னூர் ஒன்றியங்களில் உள்ள 6 கிராமங்களில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்து, 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிட்டிருந்தது. இதற்கு 6 கிராம ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களின் விவசாய நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன வசதி அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து, விரும்பி கொடுக்கப்படும் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும், அரசு யாருடைய நிலத்தையும் பறிக்காது என விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்து, அன்னூர் பகுதியில் சிப்காட் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஏற்கனவே வாகன பேரணி, நடைபயணம், கடையடைப்பு உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களையும் அவர்கள் நடத்தி வருவதுடன், மேலும் போராட்டக்குழு சார்பில் அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரசார நடைபயணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தலைமையில் ஏராளமான விவசாயிகள் காலை அக்கரை செங்கப்பள்ளியில் இருந்து தங்கள் நடைபயணத்தை தொடங்கினர். தொடர்ந்து இந்த நடைபயணப் போராட்டம் கரியானூர், சோளவாம்பாளையம், ஆலங்குட்டை, குழியூர் வழியாக வடக்கலூரில் முடிவடைந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நடைபயணத்தின் போது சிப்காட் வருவதால் ஏற்படும் பாதிப்பு குறித்த கிராம மக்களிடம் இதுகுறித்து விரிவாக எடுத்து கூறி வருகின்றனர். டைபயணத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறும்போது, விவசாய நிலங்களை எடுக்கமாட்டோம் என்ற அரசின் அறிவிப்பில் தெளிவு இல்லை. எனவே விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாய நிலங்களை பாதுக்காக வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் ஒருங்கிணைப்புக்குழுவை ஏற்படுத்த வேண்டும். அனைத்து விவசாய சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும் என தெரிவித்தனர்.
இதற்கிடையே விவசாயிகள் நடைபயணம் பற்றி அறிந்ததும் தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.