டில்லி,

லைநகர் டில்லியில் இன்று 3வது நாளாக தமிழக விவசாயிகளின் போராட்டம் மீண்டும் தொடர்கிறது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் தமிழக விவசாயிகள், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர்  அய்யாகண்ணு தலைமையில் 41 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண நிதி,  காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த  மார்ச் மாதம் டில்லி ஜந்தர் மந்திரில் தமிழக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

தொடர்ந்து  41 நாட்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில், தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மத்திய மாநில அரசுகள் உறுதி அளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என கூறி மீண்டும் டில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

முதல் நாள் போராட்டத்தின்போது பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற  அவர்களை டில்லி போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று கொட்டும் மழையிலும், அரை நிர்வாணத்துடன் தமிழக விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கொண்டு சென்ற  உடைமைகளை வைக்க  இடம் இல்லாமல் மழைநீரில் நனைந்தது. மேலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள்.

இன்று  3வது நாளாக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று எலும்புக் கூடுகளுடன் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்தோடு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது,  தமிழக அரசு, கடன் தள்ளுபடி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. அந்த வழக்கு திரும்ப பெறப்படும் என்று தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

மேலும் தேசிய வங்கிகளில் வாங்கியுள்ள கடனை  மத்திய அரசும்  தள்ளுபடி செய்ய வேண்டும். இவை எல்லாம் முறைப்படி நடக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்