ஸ்ரீநகர்.

ந்திய ஊடகங்கள் காஷ்மீர் மக்களை அவமானப்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் காவல் அதிகாரி நாதனேல்  கூறியுள்ளார்.

மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் காஷ்மீர் பிரிவில் ஐஜியாக பணி புரிந்தவர் நாதனேல். இவர் ஊடகங்களில் வெளிவரும் காஷ்மீர் பற்றிய செய்துகளப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது :

”கடந்த சில வருடங்களாக அனைத்து டிவி சேனல்களிலும் காஷ்மீர் தாக்குதல் பற்றிய செய்திகள் வெகுவாகக் காணப்படுகிறது.  ஆனால் ஒரு சில சேனல்களைத் தவிர மற்றவை எல்லாம் உண்மைச் செய்திகளை சொல்வதில்லை.   காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி தேவையா இல்லையா என்பதைக் கூட தாங்கள் தான் முடிவு செய்வதைப்போல் செய்திகள் வெளியிடுகின்றன.

ஒரு சில சேனல்கள் இந்திய ராணுவத்தின் அடிமைகளாக செய்திகள் வெளியிடுகின்றன..  தாங்களும், ராணுவ வீரர்களுடன் போர்முனையில் இருந்ததைப்போலவே செய்திகள் வெளியிடுகின்றன.  தங்களை தேசியவாதிகள் என காட்டிக் கொள்வதற்காக எந்தச் செய்தியையும் திரித்து வெளியிட அவர்கள் தயங்குவதில்லை.

இன்னொரு பக்கம் ஓய்வு பெற்ற பாகிஸ்தானி ராணுவ அதிகாரிகளை அழைத்து அவர்களை பேசவைத்து அவமானப்படுத்தும் செயல்களும் மிகவும் அரங்கேறி வருகிறது.  இதற்கு அவர்கள் பதில் அளிப்பதை ஒளிபரப்புவதே இல்லை.

இந்திய ராணுவ அதிகாரி பிபின் ராவத் தனது ஜூனியருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பேசியதாக ஒரு செய்தி வந்தது.  அதுவும் ஒரு உயர் பதவியில் உள்ள ராணுவ அதிகாரியின் புகழைக் கெடுக்கவே சொல்லப்பட்ட செய்தி போல தெரிந்தது.

ஒரு தொலைக்காட்சியில் இந்திய ராணுவம் எதிரிகளின் முகாமை அழித்தது என செய்தி வருகிறது.  அதே நேரம் மற்றொரு சேனலில் பல இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள் என செய்தி வருகிறது.  எதை நம்புவது எனத் தெரியவில்லை..

எந்த ஒரு காஷ்மீரியும் பயங்கரவாதத்தை ஆதரிப்பது இல்லை.  அந்தக் குழுவில் உள்ளவர்களைத் தவிர மற்ற மக்கள் அவர்களை எதிர்க்கின்றனர்.  ஆனால் ஊடகங்கள் அதை மறைத்து, மக்களே பிரிவினைவாதிகளை ஆதரிப்பதாக செய்தி அளிக்கிறது.  இது போல காஷ்மீர மக்களை அவமானப்படுத்துவதை ஊடகங்கள் நிறுத்தி ஆக வேண்டும்.

இஸ்லாமியர்கள் நாடெங்கும் கொல்லப்படுவது இந்த மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.  டில்லி அரசு, இந்த காஷ்மீரின் நிலை மாற வேண்டும் என நினைத்தால், இந்த மக்களின் உணர்வுகளை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.

சட்டத்தை மீறுகிறவர்கள் யார் என கண்டுபிடித்து அவர்களை ஒடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.  காஷ்மீர மக்கள் அமைதியையும், சாதாரண வாழ்க்கை நடத்துவதையும் தான் விரும்புகிறார்கள்.  தேவையற்ற செய்திகளை பரப்பி மேலும் மக்களை அவமானப்படுத்துவதை டிவி சேனல்கள் நிறுத்த வேண்டும்.  இல்லையெனில் மக்கள் பொங்கி எழும்போது அந்த விளைவுகள் கடும் பயங்கரமாக இருக்கும் “ என்றார்.