
டில்லி,
தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்திரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்றைய போராட்டத்தின்போது, உடலில் உடையாக இலை, தழைகளை கட்டியபடி போராட்டம் நடத்தினர்.
கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டில்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்றோடு 23வது நாளை எட்டுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-
வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளின் பிரச்சினைகளை பிரதமர் நரேந்திரமோடி காது கொடுத்து கேட்பதில்லை. சமூக வலைதளங்களான ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ் புக்’ ஆகியவற்றின் பயன்பாட்டில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
ஆனால் விவசாயிகள் வறுமையாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, இந்தியாவை ‘டிஜிட்டல்’ மயமாக்குவோம் என்று கூறினார்.
ஆனால் விவசாயிகளின் தற்போதைய நிலைமை கற்காலத்தை நோக்கி செல்வது போல உள்ளது.
இதனை உணர்த்தும் வகையில் உடலில் இலை, தழைகளை கட்டிக்கொண்டு ஆதிவாசிகள் போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம். விவசாயிகளின் பிரச்சினை தீரும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.