சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் – முழு விவரம் தொகுக்கப்பட்டு உள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட், உழவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், உலகளாவிய வேளாண் வல்லுநர்களின் கருத்துகளை கேட்டும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த பட்ஜெட் மத்தியஅரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு காணிக்கை என்று தமிழ்நாடு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்
வேளாண்துறையில்உள்ள சவால்களில் இருந்து மீட்டெடுக்கும் தொலைநோக்கு பார்வையுடன் தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் உணவுப் பாதுகாப்பையும், ஊட்டச்சத்து பாதுகாப்பையும் அடுத்து 10 வருடங்களுக்குள் அடைந்துவிட வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்:
- தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் மற்றும் இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.
- நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.
- இயற்கை வேளாண்மைக்குத் தனிப்பிரிவு உருவாக்கப்படும். இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும்.
- தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல்ரகங்கள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்திசெய்து வழங்கப்படும்.
- ரூ.250 கோடி செலவில் கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம்.
- அனைத்து கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்ற ‘கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்’ என்ற புதிய திட்டம்.
- பயிறு வகைகளின் விலையைக் கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகள் நலனுக்காக ரூபாய் 45.97 கோடி ஒதுக்கீடு.
- பனைவெல்லம் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நியாய விலைக்கடைகளில் கருப்பட்டி விற்பனை. செய்யப்படும். பனை வளர்ப்பினை அதிகரிக்க 76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்..
- மழைநீர் சேகரிப்பு அமைப்பு வலுப்படுத்தப்பட்டு பாசனப் பரப்பு அதிகரிக்கப்படும். சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனத்தை விரிவுபடுத்தி பயிர்வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் பரவலாக்கப்படும்.
- சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணைய முறை ஊக்குவிக்கப்படும். ₹59.87 கோடியில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வேளாண் வருவாய் உயர்த்தப்படும்.
- விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க ₹4508 கோடி நிதி ஒதுக்கீடு.
- சன்ன ரக நெற்பயிருக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை ₹75லிருந்து 100 ரூபாயாக உயர்வு.
- உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 மெட்ரிக் டன் இலக்கு.
- கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை 40 கோடி. மேலும், கரும்பு டன் ஒன்றுக்கு ₹150 சிறப்பு ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- ரூ25.13 கோடியில் எண்ணெய் வித்துகள் திட்டம்.
- தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டும் மையம். பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரியத் துணை மண்டல நிலையம்.
- 1,100 உழவு உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வாங்க மூலதன நிதியாக ₹5 லட்சம் வழங்கப்படும்.
- திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 50 மெட்ரிக் டன் திறன்கொண்ட பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும்.
- 50 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்படும்.
- சென்னையில் மரபுசார் வேளாண்மை அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
- கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில் ₹2 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
- முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம் – ₹95 கோடி ஒதுக்கீடு.
- 2 லட்சம் குடும்பங்களுக்கு மூலிகைச் செடிகள் வழங்கும் திட்டம் ₹2.18 கோடி ஒதுக்கீடு.
- கடலூர் மாவட்டம் பண்ரூட்டி வட்டாரத்தில் பலா உற்பத்திக்கான சிறப்பு மையம் 5 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்படுத்தப்படும்.
- கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ’சிறுதானிய இயக்கம்’ செயல்படுத்தப்படும்.
- சூரிய சக்தியால் இயங்கும் 5,000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும்.
- நீலகிரி எடப்பள்ளியில் 2 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை மையம் அமைக்கப்படும்.
- 6 கோடி ரூபாய் செலவில் பத்து மாவட்டங்களில் 10 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.
- மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் கொண்ட தளைகள் 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும். மூலிகைச் செடிகளைப் பெருக்கும் திட்டம் ரூ.2.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
- தரிசு நிலங்களை மாற்றிட குளங்கள், பண்ணை குட்டைகள், கசிவுநீர் குட்டைகள் போன்ற நீர் ஆதாரங்கள் பெருக்கப்படும்.
- விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்க வேளாண் இயந்திரங்கள் ரூ.23 கோடியில் கொள்முதல் செய்யப்படும்
- முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டம் – ரூ.114.68 கோடி ஒதுக்கப்படும்
- மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் திட்டம் – விவசாயிகளுக்கு ரூ.10ஆயிரம் மானியம்
- உழவர் சந்தைகளை புனரமைத்து நவீனப்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு
- உழவர் சந்தைகளில் ரூ.2.75 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மை செய்து காய்கறி கழிவு உரம் தயாரிக்கப்படும்
- நடப்பாண்டில் ரூ.6 கோடி செலவில் 10 உழவர் சந்தைகள் புதியதாக அமைக்கப்படும்
- வேளாண் விற்பனை ஒழுங்குமுறை கூடத்தில் 40 விளை பொருட்களுக்கு ஒரே சீராக உறுதி அறிவிக்கை வெளியிடப்படும்
- ரூ.10 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு அருகே சேமிப்பு வசதியுடன் விற்பனை நிலையம் அமைக்கப்படும்
- ஒட்டன்சத்திரம், பண்ருட்டியில் ரூ.10 கோடியில் காய்கறிகள், பழங்களுக்கான குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்
- 30 நடமாடும் காய்கனி அங்காடிகள் வாங்க கிராமப்புற இளைஞர்களுக்கு ரூ.2லட்சம் வரை மானியம்
வேளாண் பட்ஜெட் – முழு விவரம் தெரிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்